முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எத்தனை துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் அம்மாவின் ஆட்சியை அசைக்கவே முடியாது - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

நாகை : எத்தனை துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் அம்மாவின் இந்த ஆட்சியை அசைக்கவே முடியாது என்று நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நாகையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது.,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே நலத்திட்டங்களால் பயன்பெறாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை. நலத்திட்டங்களை விரிவாகச் சொல்வதற்கு இந்த மாநாட்டில் நேரம் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மண்ணிலே பிறக்கின்ற உயிருக்கும், நீரில்லாமல் தவிக்கின்ற பயிருக்கும் புனர் வாழ்வு கொடுத்தவர் நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தன் வீடு, தன் மக்கள் என்பதுபோல் வாழாமல், என் நாடு, என் மக்கள் என்று வாழ்ந்திட்ட  தியாகத்தின் திருஉருவம் நம் அம்மா.

இந்த பாராட்டுகளை எல்லாம் பார்க்கும் பொழுது,. எனக்கு எம்.ஜி.ஆர்.தான் நினைவுக்கு வருகிறார். ஒரு கதையும் நினைவுக்கு வருகிறது. ஒரு விவசாயி  இருட்டில் காட்டுப் பாதையைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருட்டிலே  எப்படிக் கடப்பது என்று பயந்து போய் நின்றிருந்த விவசாயிக்கு,  ஞானி ஒருவர் விளக்கு  ஒன்றைக் கொடுத்தார். பத்து மைல் போக வேண்டுமே, இந்த விளக்கு பத்தடி தூரத்திற்குக்  கூட வெளிச்சத்தைத் தராதே, எப்படி காட்டுப் பாதையைக் கடப்பது என்று விவசாயி  குழம்பிப் போய்   நின்றிருந்தான். உன் கையிலே நான் கொடுத்த விளக்கு இருக்கிறது. தைரியமாகப் போ  என்றார் ஞானி. விவசாயி இருட்டில் நடக்க ஆரம்பித்தான்.

முதல் பத்தடி தாண்டிய பிறகு, அந்த விளக்கு அடுத்த பத்தடிக்கு வெளிச்சத்தைத் தந்தது. இப்படியே அடுத்தடுத்து கடக்க வேண்டிய பத்து மைலுக்கும்,  அந்த விளக்கு  வெளிச்சத்தை தந்து கொண்டே இருந்தது. தமிழக மக்களுக்கு வழிகாட்டுவதற்காக  எம்.ஜி.ஆர். என்ற அரசியல் ஞானி, கொடுத்ததுதான் ஜெயலலிதா எனும் அற்புத விளக்கு.  சிலர்போல் தனக்கு விழும் மாலைகளைப் பற்றிச் சிந்திக்காமல்,  மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்தவர் ஜெயலலிதா.. சிலர்போல் போர்த்தப்படும் சால்வைகளைப் பற்றியே  நினைக்காமல் செய்யப்போகும் சாதனைகளைப் பற்றியே நினைத்தவர் ஜெயலலிதா. அந்தப்  பாடங்களையெல்லாம் ஜெயலலிதாவிடம் கற்று தேர்ந்து கொண்ட விசுவாசத்  தொண்டர்கள் நடத்துகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி மீது, சிலர் கல்லெறிந்து  கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் பூனைகள் அல்ல,  பலம்  வாய்ந்த யானைகள்.  தமிழக மக்களின் "அன்பு" என்ற அங்குசத்துக்கு மட்டுமே  அடி பணிவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கும், துரோகிகளின் வஞ்சகங்களுக்கும்  அடி பணிய   மாட்டார்கள். நாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய நேர்வழியிலே.  ஆட்சி நடத்திக்  கொண்டிருக்கிறோம். அந்த நல்லாட்சியை குறுக்கு வழியிலே, கவிழ்த்து விட சதி செய்கிறார்கள். பகவத்  கீதையிலே ஒரு வாசகம் உண்டு. “விநாச காலே விபரீத புத்தி” இதன் பொருள்  “கெட்ட  புத்தி வந்தால். கெட்டதுதான் நடக்கும்”. நம்மை எதிர்ப்பவர்களுக்கு கெட்ட புத்தியும்  வந்து விட்டது. கெட்ட நேரமும் வந்து விட்டது. அதனால் இனிமேல் அவர்களுக்கு  கெட்டதுதான் நடக்கும். அவர்களது விபரீத புத்தியால் ஏற்படும் விளைவுகள்,  அவர்களை அடியோடு அழித்துவிடும். ஆனால், எத்தனை துரோகங்களாலும், எத்தனை  வஞ்சகங்களாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை மட்டும், அசைக்கவே முடியாது. மக்களுக்காக, மக்கள் நலனுக்காக எம்.ஜி.ஆர். அடிச்சுவட்டில், ஜெயலலிதா வழிகாட்டியபடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து கொண்டே  இருக்கும். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து