முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டிடம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.  மேலும் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தோற்றுவித்தல், எளிதில் செல்லமுடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.  மேலும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், நீலகிரி மாவட்டம் - டி.ஓரநல்லி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் - கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், திருநெல்வேலி மாவட்டம் - கீழநத்தம், தருமபுரி மாவட்டம் - கே.என். ஹள்ளி மற்றும் செல்லமுடி, விழுப்புரம் மாவட்டம்- ஆரம்பூண்டி மற்றும் எரையூர் ஆகிய ஐந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  கட்டிடங்கள், என மொத்தம் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்,  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அஹமது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் பி. பானு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து