முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் தோல்வி கண்டனர்.

5-வது வெற்றி
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்தித்தார். உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய நஜோமி ஒகுஹரா 21-18, 21-8 என்ற நேர்செட்டில் சிந்துவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 47 நிமிடம் தேவைப்பட்டது. இதன் மூலம் கடந்த வாரம் கொரியா ஓபன் இறுதி ஆட்டத்தில் சிந்துவிடம் கண்ட தோல்விக்கு ஒகுஹரா பழிதீர்த்துக் கொண்டார். சிந்துவுக்கு எதிராக 9-வது ஆட்டத்தில் ஆடிய ஒகுஹரா அதில் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

4-வது வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 13-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெளியேறினார். சாய்னாவுடன் 8-வது முறையாக மோதிய கரோலினா மரின் அதில் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் ஹூ யுன்னை (ஹாங்காங்) துவம்சம் செய்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்ரீகாந்த் கால்இறுதியில் உலக சாம்பியன் விக்டர் ஆக்ஸ்செல்சனை (டென்மார்க்) எதிர்கொள்கிறார்.

முன்னேற்றம்
இந்திய வீரர் சமீர் வர்மா 21-10, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஷி யுகியிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21-13, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் யுகி கானேகோ-கோஹரு யோனேமோடோ இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. இதற்கிடையே கொரியா ஓபன் சூப்பர் சீரிசில் வாகை சூடியதன் மூலம் நேற்று முன்தினம் வெளியான புதிய தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சிந்துவின் சிறந்த தரவரிசை இதுவாகும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலும் அவர் 2-வது இடத்தில் இருந்திருக்கிறார்.

பிரணாய் தோல்வி
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரணாய், சீனாவின் ஷியுங்வ மோதினார். அதில் பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தில் தோற்று வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்லி சோயரா- சிக்கிரெட்டி ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஜோடி கால் இறுதியில் தென் கொரியாவின் சே செயுங்- கிம்ஹானா ஜோடியை 21-18, 9- 21, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

ஸ்ரீகாந்த்தோல்வி
நேற்று நடைபெற்ற காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலக சாம்பியன்ஷிப் வீரரான விக்டர் அக்செல்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்ட எச்.எஸ்.பிரனாயும் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து