முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் ஒன்றிணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் ஒன்றிணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது விருப்பமான ரேஷன் கடைகளை தேர்வு செய்து பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இத்திட்டத்திற்காக பொது விநியோக அமைப்பில் ஆதார் இணைக்கும் பணி படிப்படியாக நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் ஒன்றிணைக்க தமிழகஅரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக பொது விநியோக அமைப்பில் ஆதார் எண் இணைக்கும் பணியை படிப்படியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: முழுவிவரங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பின் இத்திட்டத்திற்கான முன்னோட்ட பணிகள் தொடங்கப்படும். இப்பணிக்காக குறிப்பிட்ட காலஅளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒரு மாத காலத்திற்குள் ஆதார் இணைக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,850 ரேஷன் கடைகளில் 9,270 கடைகள் பகுதிநேரமாக செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கூட்டுறவுத்துறையின் கீழ் இயக்கப்படுகின்றன. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் தங்களது வசதியான அல்லது விருப்பமான ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கைரேகை பதிவை சரிபார்த்தபின்பு அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

சட்டீஸ்கர் மாநிலம்தான் இத்திட்டத்திற்கான முன்னோடி. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானாவின் ஹதராபாத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் செயல்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து