முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார் தினகரன் - அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க.வுடன் பகிரங்க கூட்டணி அமைத்து அம்மா அமைத்த ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார் என்று தினகரன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பி்றந்தநாளையொட்டி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பகுதி மாணவர் அணி செயலாளர் கணேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து கட்சியையும், ஆட்சியையும் அமைத்து கொடுத்தார். இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க. தான் ஆள வேண்டும் என்று சபதம் எடுத்தார். அந்த சபதத்தை அ.தி.மு.கவில் உள்ள ஒவ்வொருவரும் நிறைவேற்ற பாடுபட வேண்டும் ஆனால் அம்மாவால் கட்சியை விட்டே தூக்கியேறியப்பட்டவர்கள் இப்பொழுது அவரது ஆட்சியை கலைக்க துடிக்கிறார்கள்.

ஜெயலலிதா காலமெல்லாம் எந்த தீய சக்தி தி.மு.கவை எதிர்த்தாரோ அவர்களோடு கூட்டணி சேர்ந்து அம்மா வழியில் நடக்கும் இந்த ஆட்சியை வீழ்த்த சதித்திட்டம் தீட்டுகிறார்கள். பரமசிவனை எல்லோரும் வழிப்படுகிறார்கள். ஆனால் அவரது கழுத்தில் இருந்த பாம்பு தன்னை தான் எல்லோரும் வழிப்படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டதாம். அது போல ஜெயலலிதா கடவுளாக நாங்கள் வழிப்பட்டோம். ஆனால் பரமசிவனை கழுத்தை சுற்றிய பாம்பாக இருந்த தினகரனை வழிப்படவில்லை. பரமசிவன் இல்லையென்றால் பாம்பின் கதி என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பரமசிவன் கழுத்து பாம்பாக எண்ணி தன்னை வழிபட வேண்டும் என்று விஷத்தை கக்குகிறார் தினகரன் அது நடக்காது.

கட்சிக்கும் ஆட்சிக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை அவரை அடிப்படை உறுப்பினராக கூட சேர்க்கவில்லை. விலக்கியே வைத்திருந்தார். சசிகலா வந்ததும் துணை பொதுசெயலாளர் ஆகி விட்டார். ஜெயலலிதா அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுசெயலாளர். அவருக்கு நிகர் இனி எவருமில்லை. சசிகலாவால் துணை பொதுசெயலாளர் ஆக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவே பொதுசெயலாளர் இல்லை என்றபோது தினகரன் துணை பொதுசெயலாளர் ஆனது செல்லாது. அ.தி.மு.க நாங்கள் தான் என்பதை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்து விட்டோம். இனி அ.தி.மு.க.வும் நாம் தான். இரட்டை இலையும் நமக்கு தான் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ், அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் சிந்தை ஆறுமுகம் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, பகுதிசெயலாளர் ஜெயசந்திரன், வட்ட செயலாளர்கள், ஆர்.அறிவழகன், தங்கதுரை என்கிற பாபு, ஆர்,.என் சேகர்,, பகுதிக்கழக அவைத்தலைவர் நரேஷ்குமார் மற்றும் கே.ஆர். காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து