முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவின் அரசுக்கு எதிராக துரோகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது - கிருஷ்ணகிரி விழாவில் துணை முதல்வர் ஒ.பி.எஸ். பரபரப்பு பேச்சு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

கிருஷ்ணகிரி : அம்மாவின் அரசுக்கு எதிராக, துரோகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார். அதாவது மு.க.ஸ்டாலினையும், டி.டி.வி. தினகரனையும் மறைமுகமாக அவர் தாக்கி பேசினார்.

கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மன்னர் இல்லாத நாடு என்று, சில மங்குனிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களுமே  மன்னர்கள்தான். இது  எங்கள் ஆட்சி. இது  உங்கள் ஆட்சி. இது  நமது ஆட்சி. என்று சொல்லுவதைவிட, தமிழக மக்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு,  இது  மக்கள்  ஆட்சி  என்று  முழங்குவோம். சோதனைகளையும், சாதனைகளாக மாற்றுகின்ற வல்லமை அகில இந்தியாவிலேயே, அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

அம்மா வழிகாட்டிய தர்மத்தின் பாதையிலே சாதனைகளை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றிகளை நோக்கித்தான் வீரநடைபோட்டு  கொண்டிருக்கிறோம். எதிர்ப்புகள் எந்தத் திசையில் இருந்து வந்தாலும் சரி. எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அவற்றையெல்லாம்  உடைத்தெறிவோம். சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு நன்றாக இருந்தாலே பிடிக்காது. நாட்டிலே எதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.

சிலருக்கு நாடு அமைதியாக இருந்தாலே பிடிக்காது. எதாவது போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றாலும் அவர்களே போராட்டங்களைத் தூண்டி விடுவார்கள். இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று சதி செய்பவர்கள் எல்லோருமே. மக்களின் விரோதிகள் என்று தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை, தனது தர்மக் கரங்களால் தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அம்மாவின் அரசு, அரசு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதைக்கூட சிலர் விமர்சனம் செய்து   கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகவே அள்ளி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.

மக்களுக்காக கொடுத்தவரின் நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாக கொண்டாடக் கூடாதா? நேர்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு. தூய்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு. கறைபடாத ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு.  புனிதமான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, அம்மாவின் அரசு,   நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடாதா? மக்கள் திலகத்திற்கு கொண்டாடுகின்ற விழா என்று மக்களே மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் மட்டும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் இருந்த பொழுதே, அவரை எதிர்க்க திராணி இல்லாதவர்கள், இப்பொழுது அவரது நூற்றாண்டு விழாவை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விலையில்லா 20 கிலோ அரிசி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். 100 யூனிட் மின்சாரம் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மகப்பேறு உதவி  கொடுப்பதை  எதிர்ப்பவர்கள். முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக உயர் சிகிச்சை அளிப்பதை எதிர்ப்பவர்கள். அம்மா உணவகங்கள் மூலம் அடித்தட்டு மக்கள் பசியாறுவதை எதிர்ப்பவர்கள்.

இந்த தீய மனம் கொண்டவர்கள்தான். அம்மாவின்  இந்த அரசை எதிர்த்துக்  கொண்டிருக்கிறார்கள்.  இந்த உத்தம புத்திரர்கள்தான். புரட்சித் தலைவரின் நூற்றாண்டு  விழா கொண்டாடப்படுவதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவரின்  நூற்றாண்டு விழா என்பது. செம்மொழி மாநாடு என்ற பெயரிலே, மக்கள் பணத்தில்  கொண்டாடப்பட்ட குடும்ப விழா அல்ல,  பல கோடி மக்களின் பசியாற்றிய, அன்பு  தெய்வத்தின் நூற்றாண்டு விழா. அம்மாவின் அரசு, வெறும் மணல் கோட்டை அல்ல. சுலபமாக கலைத்து விடுவதற்கு, எம்.ஜி.ஆரின் தர்மத்தால். அம்மாவின் கடும் உழைப்பால். தன்னலமற்ற தியாகத்தால்.   உருவான அரசு. அம்மாவின் ஆட்சியைக் கலைப்பதற்கு, இனி ஒருவன் இந்த மண்ணில் பிறந்துகூட வர முடியாது.

தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்கு, தர்மமும், தர்மமும் சேரலாம், சத்தியமும்,  சத்தியமும் சேரலாம், நேர்மையும், நேர்மையும் சேரலாம், வாய்மையும், வாய்மையும்  சேரலாம், ஆனால் அம்மாவின் அரசுக்கு எதிராக, துரோகமும், துரோகமும் சேர்ந்திருக்கிறது. வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது. பொய்மையும்,  பொய்மையும் சேர்ந்திருக்கிறது. விஷத்தோடு, விஷம் சேர்ந்திருக்கிறது. நஞ்சு மணம் படைத்தவர்களை, பஞ்சு பஞ்சாக பறக்க விடும் ஆற்றல் அம்மாவின் விசுவாத் தொண்டர்களுக்கு  இருக்கிறது.

கழகத்தை அழிக்க நினைக்கும் விஷம் மணம் கொண்டவர்களை வீழ்த்துக்கின்ற ஆற்றல், விசுவாசத் தொண்டர்களுக்கு இருக்கிறது. தமிழக அரசியலில், அம்மாவின் ஆட்சிக்கு எதிராக, ஒரு விபரீத நட்பு உருவாகியிருக்கிறது. தமிழக மக்களுக்காக. அவர்களின் நலனுக்காக. எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலே, அம்மாவின் புனிதப் பாதையிலே, விசுவாசத் தொண்டர்கள் நடத்தும், அம்மா அவர்களின் ஆட்சி, தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறி, நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து