முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

407-ஆவது ஆண்டாக களைகட்டிய மைசூரு தசரா விழா: அரச பரம்பரை வாளுக்கு சிறப்பு பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

மைசூரு :  தசரா பண்டிகையையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூருவில் விழா களைகட்டியது. இந்த விழா 407-ஆவது ஆண்டாக கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் தசரா என்பது மிகவும் விஷேசமானதாகும். நவராத்திரி பூஜையை முன்னிட்டு நடைபெறும் இந்த 10 நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் விரதமிருந்து துர்கா தேவியை வழிபடுவர். இந்த ஆண்டு தசரா விழா வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. சீதையை காப்பாற்ற ராவணனுடன் போரிட்டு ராமர் வெற்றி பெற்ற தினமாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ராவணனின் பெரிய சிலைகள் செய்யப்பட்டு தசரா விழா அன்று ராமர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அந்த சிலைகளை தீயிட்டு கொளுத்துவர்.

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கர்நாடகாவின் மைசூருவில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். மகிஷாசுரனை சாமுண்டீஸ்வரி தேவி வதம் செய்த நாளை தசராவாக இந்த மாநிலத்து மக்கள் கொண்டாடுகின்றனர். மைசூரில் தசரா கொண்டாட்டம் 407-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.

கடந்த 14-ஆவது நூற்றாண்டு முதல் விஜயநகர ஆட்சி காலத்தின் போது மைசூர் அரண்மனையில் தசரா பண்டிகை முதல் முறையாக கொண்டாடப்பட்டது. போர் புரியும் தெய்வமாக துர்கை உள்ளதால் ஆண்டுதோறும் தற்காப்பு நிகழ்ச்சிகளுடன் தடகள போட்டிகளும், வாணவேடிக்கையும், அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

கடந்த 1805-இல் கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில் சிறப்பு தர்பார் தொடங்கப்பட்டது. இதில் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு விருந்தினர்கள், அரண்மனை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். அப்போது மக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். தசரா விழாவின் 9-ஆவது நாளன்று அரண்மனையின் அரச வாளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து அந்த வாளானது தங்க சிம்மாசனத்தில் வைக்கப்படும்.

தசரா விழாவின் ஒரு பகுதியாக அரண்மனை முழுவதும் ஒரு லட்சம விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை விண்ணுக்கே வெளிச்சம் காட்டும் அளவுக்கு அரண்மனை பிரகாசமாக இருக்கும். கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அரண்மனைக்கு முன்பு நடத்தப்படும்.

தசரா திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி யானைகள் ஊர்வலமாகும். இந்த ஊர்வலத்தின்போது தங்கத்திலான சாமுண்டீஸ்வரி சிலை சிறிய மண்டபத்தில் வைக்கப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானையில் அந்த சிலை அமர்த்தப்பட்டு நகரம் முழுவதும் ஊர்வலம் எடுத்துச் செல்லப்படும்.

இந்த ஊர்வலம் வன்னி மரங்கள் நிறைந்திருக்கும் மண்டபத்தில் முடிவடையும். இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் போரில் வெற்றி நிச்சயம் என்பதை அரசர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 10-ஆவது நாளான விஜயதசமி அன்று முடிவடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து