முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில் முன்பதிவுக்கு அனைத்து வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம் - ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சென்னை : ரெயில் முன்பதிவுக்கு எல்லா வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.

ரெயில் பயணிகள் முன்பு ரெயில் நிலையத்துக்கு தான் சென்று டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.  தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு என சேவை கட்டணம் பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்தது. ஆனால் இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம் இதற்கு இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் ஒத்துழைப்பு தந்தன. ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பை தொடர்ந்து ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ஒரு விதிமுறையை வகுத்தது. அதன்படி ரூ.1000 வரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.25 சதவீதமும், ரூ.2000 வரை 0.5 சதவீதமும், ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1 சதவீதமும் சேவை கட்டணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வசூலிக்கப்பட்டது.

பிப்ரவரி 16–ந்தேதிக்கு பிறகு ரூ.1000 வரை ரூ.5–ம், ரூ.2000 ஆயிரம் வரை ரூ.10, ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 0.5 சதவீதமும் சேவை கட்டணமாக வசூலிக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த கட்டணம் வசூலிப்பதில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என  குறிப்பிடப்பட்டது.
ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தில் சில வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் அட்டைகளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இப்போது ரெயில் முன்பதிவுக்கு எல்லா வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்கெட் முன்பதிவுக்கு எந்த வங்கிகளின் ஏ.டி.எம். அட்டைகளுக்கும், கிரெடிட் அட்டைகளுக்கும் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை.
மாஸ்டர் அல்லது விசா வசதியுடைய இந்தியாவை சேர்ந்த எந்த வங்கிகளின் ஏ.டி.எம்., கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இருக்கும் 7 வழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து