முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தூய்மை படுத்தும் பணி

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை- தூய்மையே சேவை பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தை துரிதப்படுத்துதல் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை ஊக்கப்படுத்துதல், ஒவ்வொரு குடிமகனும் இத்திட்டத்தில் தன்னை ஒரு அங்கமாக ஈடுபடுத்த உறுதி செய்தல் போன்றவை ஆகும்.
  அதன்படி தூய்மையே சேவை பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டு, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நகர் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஹோட்டல்கள், கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.09.2017) உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு தெரிவித்ததாவது:
   கோயிலின் உள்சுற்றுப்பிரகாரம் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதி வளாகத்தில் 50 அடிக்கு ஒரு குப்பை தொட்டியினை வைத்து குப்பைகளை அதில் கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  துப்புரவு பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்கு தூய்மை காவலர்கள் அடங்கிய குழு பணியமர்த்தப்படுவார்கள்.  இங்கு அமைக்கப்படும் குப்பைத்தொட்டியினை பயன்படுத்தி குப்பைகளை கொட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் கோயிலின் உட்பிரகார பகுதிகளில் அசுத்தப்படுத்துபவர்களிடமிருந்து கோயில் நிர்வாகம் சார்பில் அபராத தொகையாக ரூ.50ம், கோயிலின் வெளிப்புறப்பகுதிகளில் அசுத்தப்படுத்துபவர்களிடமிருந்து மாநகராட்சி சார்பில் அபராத தொகையாக ரூ.50ம் வசூலிக்கப்படும்.  மேலும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் கோயில் வளாகத்தை அசுத்தப்படுத்துபவர்களை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத லட்டு பரிசாக வழங்கப்படும். 
  உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகவும், மதுரை மாநகருக்கு பெருமை சேர்க்கும் பொக்கிஷமாகவும் விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.  கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும்.  இப்பழக்கத்தினை கோயிலுக்கு வருகை தரும் பிற பக்தர்களிடமும் தெரியப்படுத்தி குப்பை தொட்டியை பயன்படுத்தும் படி அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ் சேகர்,  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன், நகர் நல அலுவலர் சதீஸ்ராகவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து