முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியான படத்தைக் காட்டிய விவகாரம்: பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்கிறது ஐ.நாகூட்டத்தில் இந்திய பெண் அதிகாரி பதிலடி

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் தவறான ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில் அந்த நாடு பொய் பிரச்சாரம் செய்வதாக இந்திய பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஐ.நா. பொது சபையின் 72-வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

சுஷ்மா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரக நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி 23-ம் தேதி பேசினார். அப்போது தெற்கு ஆசியாவில் தீவிரவாதத்தின் தாயகமாக இந்தியா விளங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பெல்லட் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார்.

அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த பெண் காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா என்பது தெரிய வந்துள்ளது.

அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக சித்தரித்து ஐ.நா. சபையில் அனுதாபத்தை தேடவும் இந்தியா மீது அவதூறு பரப்பவும் பாகிஸ்தான் தூதர் மலீஹா கபட நாடகமாடினார். ஆனால் அவரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமான தால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது.

இந்நிலையில், 25-ம் தேதி பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி பவுலோமி திரிபாதி, பாகிஸ்தான் பிரதிநிதியின் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்போது அவர் பேசும்போது, “இந்த அவையில் ஏற்கெனவே பேசிய பாகிஸ்தான் தூதர் இந்தியா மீது பொய் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு புகைப்படத்தைக் காண்பித்தார். போலியான அந்த புகைப்படத்தைக் காட்டி அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய்யானவை.

சர்வதேச தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ் தான் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்தான் இந்த புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது புகார் கூறியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமான தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை, ஹெய்தி லெவைன் என்ற அமெரிக்க புகைப்பட கலைஞர் படம் பிடித்தார். இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 2015-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வெளியானது” என்றார்.

ராணுவ வீரர் படுகொலை
இதையடுத்து, திரிபாதி மற்றொரு புகைப்படத்தைக் காட்டி பேசும்போது, “இது இந்திய இளம் வீரர் லெப்டினன்ட் உமர் பயாஸின் (23) உண்மையான புகைப்படம். போலியானது அல்ல. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள வன்மத்துக்கு இதுதான் சான்று. இந்தப் புகைப்படம் பாகிஸ்தானின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.

லோதிக்கு ட்விட்டரில் குட்டு
இதனிடையே ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய மலீஹா லோதிக்கு எதிராக பாகிஸ்தானியர்களே ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.

துணிச்சலான திரிபாதி
ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் இளம் அதிகாரியாக பவுலோமி திரிபாதி பணியாற்றி வருகிறார். இவர் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்.

ஜெனீவாவைச் சேர்ந்த மனித உரிமை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்க ஐ.நா. கவுன்சில் கடந்த ஜூலை மாதம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. குறிப்பாக இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, இந்திய அதிகாரியான பவுலோமி திரிபாதி, “இந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்கக் கூடாது” என தெரிவித்தார். அந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்திருந்ததும் அதன் நிறுவனருக்கு அமெரிக்காவும் ஐ.நா.வும் தடை விதித்திருந்ததுமே இதற்குக் காரணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து