கப்பலூர் டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்:நீண்டநேரம் வரிசையில் காத்துக்கிடந்து வாகனஓட்டிகள் அவதி

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      மதுரை
tmm news

திருமங்கலம்.- நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பிடும் நாளான நேற்று திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்க நேரிட்டதால் வாகனஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
ஆயுதபூஜை,சரஸ்வதிபூஜை விஜயதசமி பண்டிகை மற்றும் காந்திஜெயந்தி காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விடுமுறையை கொண்டாடி மகிழந்தனர்.இதனிடையே விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது பணியிடங்களுக்கு பேருந்துகளிலும்,கார்களிலும்,வேன்களிலும் ஒரே சமயத்தில் கிளம்பினார்கள்.இதன் காரணமாக திருச்சி,சென்னை மற்றும் பெங்களுரு நோக்கிச் சென்றிடும் நான்குவழிச்சாலை அனைத்திலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து கடுமையான நெரிசல் ஆங்காங்கே ஏற்பட்டது.இதனை ஆங்காங்கேயுள்ள போக்குவரத்து போலீசார் மற்றும் ஹைவே பேட்ரோல் போலீசார் சீர்செய்து வாகனப் போக்குவரத்து தங்கு தடையின்றி செல்ல உதவியபடி இருந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் நான்குவழிச்சாலை டோல்கேட்டில் நேற்று மதியம் முதலே வாகனங்களில் இயக்கம் அதிகரித்து காணப்பட்டது.இருப்பினும் டோல்கேட்டை கடந்து சென்றிடும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்தும் டோல்கேட் நிர்வாகம் கூடுதலாக பணியாளர்களை பணியமர்த்திடாமல் கட்டண வசூலை கராறாக செய்தபடி இருந்தனர்.நேரம் செல்லச் செல்ல வாகனங்களின் கூட்டம் அதிகரித்ததால் செய்வதறியாது திகைத்துப்போன டோல்கேட் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து தங்களது பணிகளை மிகவும் மெதுவாக செய்ய ஆரம்பித்தனர்.இதன் காரணமாக கப்பலூர் டோல்கேட்டில் மதுரை நோக்கிச் சென்றிடும் பாதையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்க நேரிட்டது.மேலும் ஆமைபோல் வாகனங்கள் இயக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்;பட்டது. ஒவ்வொரு வாகனமும் கப்பலூர் டோல்கேட்டை கடந்து சென்றிட சுமார் 45நிமிடங்கள் வரை ஆனதால் வாகனஓட்டிகளும்,பொதுமக்களும் நீண்ட நேரம் வாகனங்களில் காத்துக்கிடந்து பெரும் அவதிக்கு ஆளானார்கள். கப்பலூhர் டோல்கேட் நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கு காரணமாகவே விடுமுறை நாட்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களிலாவது கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து