முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசை நிகழ்ச்சியில் 59 பேர் பலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

லாஸ்வோகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஐஎஸ் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 59 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மர்ம நபர் தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீஸார் (ஸ்வாட் குழுவினர்) சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மண்டாலே பே ஓட்டலின் 32-வது மாடியிலிருந்த ஓர் அறையிலிருந்து அந்த மர்ம நபர் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அந்த நபரின் பெயர் ஸ்டீபன் படாக் (64) என்பதும் நெவடா மாகாணம் மெஸ்கொயட் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அந்த அறையிலிருந்து சுமார் 10 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த நபருடன் வசித்து வந்த மரிலூ டான்லி என்ற பெண் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் பொறுப்பேற்பு
எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்ட அறிக்கையில், “லாஸ் வேகாஸ் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவரால் நிகழ்த்தப்பட்டது. அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 போலீஸார் உட்பட 59 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை உயர் அதிகாரி ஷெரீப் ஜோசப் லொம்பார்டோ தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்நிகழ்ச்சியில் பாடிய இசைக் குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தியருக்கு பாதிப்பில்லை
இந்தத் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இது தொடர்பாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தொடந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நெவடா கவர்னர் பிரியன் சன்டோவல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் தனிமனிதரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆர்லாண்டு இரவு விடுதியில் நடந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து