மாநில ஜுனியர் கூடைப்பந்து போட்டி

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கோவை

 

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளில் கோவை மாவட்ட அணிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

கூடைப்பந்து போட்டி

 

ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணி லீக் சுற்றில் சென்னை 1 அணியை 58-33 என்ற புள்ளிக் கணக்கிலும், கடலூர் அணியை 30-4 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற நாக்அவுட் சுற்றில் விருதுநகர் மாவட்டத்தை 30-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் முறையே திண்டுக்கல் மாவட்டத்தை 70-40 மற்றும் சேலம் மாவட்டத்தை 51-36 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தை 43-40 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணி லீக் சுற்றில் திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை முறையே 45-02 மற்றும் 50-34 என்ற புள்ளிக் கணக்கில் வென்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றுகளில் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளில் முறையே சென்னை 2 அணியை 70-36 என்ற புள்ளிக் கணக்கிலும் தூத்துக்குடி மாவட்டத்தை 49-28 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சேலம் மாவட்டத்தை 54-37 என்ற புள்ளிக் கணக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இப்போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக அணிக்கான பெண்கள் பிரிவில் கோவை அல்வேர்னியா பள்ளியைச் சேர்ந்த கே.சத்யா, எ.நித்திகா மற்றும் சி.காவியாவும் ஆண்கள் பிரிவில் ராஜலட்சுமி பள்ளிகளைச் சேர்ந்த எஸ்.கவுதம் மற்றும் நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சி.சரண் ஆகியோரும் தேர்வு செய்யபட்டனர். இவர்கள் ராஜஸ்தான் மாநில ஜெய்பூரில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணிக்காக பங்கேற்க உள்ளனர்.

சிறப்பாக செயல்பட்ட கோவை மாவட்ட அணியின் பயிற்சியாளர்கள் முருகேசன் மற்றும் சந்தோஷ் மற்றும் விளையாட்டு வீரர்களை கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ், செயலாளர் சிரில் இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து