முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் நடராஜன் தலைமையில் ராமநாதபுரத்தில் உலக முதியோர் தினவிழா

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் உலக முதியோர் தினவிழா கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
 ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  சமூக நலத்துறை மற்றும் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக, உலக முதியோர் தினவிழா கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- சர்வதேச முதியோர் தினம் 1991 முதல் அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  மூத்த குடிமக்களின் திறமைகளை உணர்ந்து சமுதாயத்திற்கான அவர்களின் பங்களிப்பினை உறுதி செய்தலே 2017 சர்வதேச முதியோர் தினத்தின் நோக்கமாகும். பெற்றோர்களையும் மற்றும் மூத்த குடிமக்களையும் பராமரித்தல் என்பது இந்திய குடும்ப வாழ்வியல் முறையின் ஒரு அங்கமாக தொன்று தொட்டு இருந்து வருகின்றது.  வயதில் இளையவர்கள் மூத்த குடிமக்களை மதித்து அவர்களுடைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்க்கையினை நடத்துவதென்பது கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தின் ஆணி வேராக இருந்து வந்தது.  ஆனால் இன்றைய நிலையில் பெற்றோர்களைப் கைவிடுதலும், தவிக்க விடுதலும் தற்போது சாதாரண நிகழ்வுகளாக உள்ளன.  முதியோர்களை தங்கள் சொந்த இல்லங்களில் வைத்து பராமரிக்க செய்வது நமது கடமையாகும்.
 மேலும் அரசமைப்பில் உறுதி செய்யப்பட்ட கைவிடப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் தங்களின் சாதாரண வாழ்க்கைக்கான செலவுகளுக்கு வாழ்க்கை பொருளுதவி கிடைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கவும், எளிய முறையில் வாழ்க்கைப் பொருளுதவி பெறவும் நம் மத்திய அரசு பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007  மற்றும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தமது உரிமைகளைப் பெற மகன்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரலாம்.  இவர்கள் தவிர தனது சொத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் மீது புகார் செய்யலாம்.
 இதுகுறித்து புகார்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவசியமில்லை.  இது பற்றிய புகார்களை முதற்கட்டமாக கோட்;டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்;ப்பாயத்தில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டும்.  இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைவாக முடிப்பதற்கென தீர்ப்பாயங்கள் உட்கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.  இச்சட்டத்தின் கீழ்அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் நீதிமன்றத்திற்குள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றன.  இச்சட்டத்தின் கீழ் மாவட்ட சமூகநல அலுவலர் சமரச அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் இம் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராவார்.  புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 74925 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படுகின்றது.  முதியோர் உதவித்தொகையாக மட்டும் 47425 பயனாளிகளுக்கு  வழங்கப்பட்டு வருகின்றது. முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கௌரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.  மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்தை மனதில் கொண்டு சேமிப்புகளை மேற்கொள்வதுடன், தங்களது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்குதல் நலமளிக்கும். இவ்வாறு பேசினார். பின்பு, 20 முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும், 01.10.2017 அன்று நடைபெற்ற முதியோர் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
 அதன்பின்பு, மூத்த குடிமக்களுக்கு தமிழ்ச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர், அவார்டு டிரஸ்ட் முதுகுளத்தூர், தர்மக்கரங்கள் பரமக்குடி மற்றும் சுரவா பார்த்திபனூர் ஆகிய நன்கொடையாளர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக ராமநாதபுரம் ரோமன் சர்ச் முன்பாக மாவட்ட கலெக்டர் மூத்த குடிமக்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.  இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படும் முதியோர் மற்றும் ஒருங்கிணைந்த இல்லங்களில் தங்கியுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இல்லங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி,  மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, சமூக பாதுகாப்பு திட்;ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் எஸ்.சேசுராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி, தமிழ்ச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு செயலர் நா.இராமகிருஷ்ணன் உள்பட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து