முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 10-வது தேசிய செயற்குழு கூட்டம்: சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் மீண்டும் தேர்வாகிறார்

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : இன்று நடைபெறவுள்ள உள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் மீண்டும் சமாஜ்வாடி கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

செயற்குழு கூட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி பெரும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் முலாயம் சிங் ஈடுபட்டு வந்தார். அவரது சகோதரர் சிவபால் யாதவ் விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்ததற்கு முலாயம் சிங் உடன்படவில்லை.
இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த வாரம் முலாயம் சிங் வீட்டுக்கு சென்று சந்தித்து, தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் 10-வது தேசிய செயற்குழு கூட்டம் இன்று ஆக்ராவில் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தேர்வு ...

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் சவுத்ரி கூறுகையில், ‘நாளை (இன்று) நடைபெற உள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படி தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சி தலைவராக நீடிப்பார். 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் 2022-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் ஆகியவற்றுக்கு தலைமை பொறுப்பு வகித்து கட்சியை வழிநடத்துவார்' என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தமின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி மாநில அளவில் நடந்த கட்சி கூட்டத்தில் முலாயம் சிங் மற்றும் அவரது சகோதரர் சிவபால் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து