தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களை திரையிடமாட்டோம்: தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      சினிமா
no deepawali release 2017 10 4

சென்னை : இரட்டை வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி படங்களை திரையிடமாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

சினிமா தியேட்டர்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தமிழக அரசு உள்ளாட்சி வரி விதித்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் மதுரை, ராமநாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் உள்ளாட்சி வரி விதிப்பை நீக்காவிட்டால் 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூடுவது என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்படி 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் வரி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் உள்ளாட்சி கேளிக்கை வரியாக 10 சதவீதம், 20 சதவீதம் விதிப்பது சரியல்ல. இதை முழுவதுமாக நீக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 18-ந்தேதி (புதன் கிழமை) தீபாவளி திருவிழா முதல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகள் காலவரையின்றி இயங்காது. எங்கள் கோரிக்கை குறித்து அரசு வெகு விரைவாக முடிவு எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலும் தியேட்டர் உரிமையாளர்களும் இரட்டை வரி விதிப்பு குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இன்று தங்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். எனவே உள்ளாட்சி வரி விதிப்பை அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால் தீபாவளி தினம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று கூறப்படுகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து