முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் குடோன்களில் முறைகேடு ரூ.600 கோடிக்கு ஊழல் கண்டுபிடிப்பு: உத்தராகண்டில் அதிகாரி பணி நீக்கம்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

டோராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ரேஷன் குடோன்களில் ரூ.600 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயரதிகாரி ஒருவரை மாநில அரசு உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிது. முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி வகிக்கிறார். இந்நிலையில், ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கினாலும் மோசமாக உள்ளது என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் கூறி வந்தனர். இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வர் ராவத் உத்தரவிட்டார்.

உதம்சிங் நகர் மாவட்ட ஆட்சியர் நீரஜ் கைர்வால் தலைமையிலான இக்குழு, குமாவூன் மண்டலத்தில் உள்ள உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு நடத்தியது. அப்போது ருத்ராபூர், காஷிபூர், கிச்சா ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களில் 2 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.600 கோடி அளவுக்கு ரேஷன் குடோன்களில் ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து உத்தராகண்ட் உணவுப் பொருள் மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி விஷ்ணு சிங் தைனிக் கடந்த திங்கட்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டார். விஷ்ணுவுக்கு 2 முறை ஹரீஷ் ராவத் ஆட்சியின் போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட்டில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதும் தேசிய நெடுஞ்சாலை 74 திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது அம்பலமாகி உள்ளது. இதனால் மாநில காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து