முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதிக்க ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் டெங்கு தடுப்பு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மாவட்ட கலெக்டர் தலைமையில் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி மற்றும் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஆகியவற்றை எடுத்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  டெங்கு வைரஸ் காய்ச்சலைப் பொறுத்த வரையில் பிற வைரஸ் காய்ச்சல் போன்று இதுவும் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலே ஆகும்.  சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் என்ற கொசுவினால் இவ்வைரஸ் காய்ச்சல் உருவாகின்றது.  எனவே ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதன் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுத்திட முடியும். 
 வீட்டில் உள்ள குடிக்க மற்றும் பிற பயன்பாட்டிற்காக தேக்கி வைத்துள்ள தண்ணீர் குடங்கள், கீழ்நிலை தொட்டிகள், மேல்நிலை தொட்டிகள், டிரம் ஆகியவற்றை கொசு புகாத வகையில் மூடி வைத்தல் வேண்டும்.  மேலும், வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் கப்புகள், உரல், மண் சட்டிகள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல் ஆகியவற்றை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காத வகையில் சுத்தமாக பராமரித்திட வேண்டும்.  ஏடிஸ் வகை கொசு பகல் நேரத்தில் கடிக்கும் தன்மையும், அரை கி.மீ தொலைவு வரை பறக்கும் தன்மையும் கொண்டது.  ஆகையால் நம் வீட்டை சுத்தமாக பராமரிப்பதோடு,  நாம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்க கூடிய பள்ளி கூடங்கள், அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றையும் சுத்தமாக பராமரிப்பது  அவசியம் ஆகும்.
 காய்ச்சல் அறிகுறி ஏற்படும் பட்சத்தில் பதற்றமடையாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக மருந்து மாத்திரைகளை கடைகளில் வாங்கி உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும்.    மேலும், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலைய செவிலியர்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெறும் சர்க்கரை உப்பு கரைசலை உட்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் நீர் சத்து இழப்பை தடுத்து டெங்குவினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம்.  நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த திட்டு அணுக்கள் குறைவதை தடுத்து டெங்குவினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.
 மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆகியவற்றில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அலுவலகம் மற்றும் அலுவலக சுற்றுப்பகுதிகளை சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கொசு ஒழிப்பு பணிகளில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.  இவ்விழாவில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன்ராஜ், துணை இயக்குநர் (சுகாதாரத்துறை) மரு.குமரகுருபரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி , மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் மரு.ஜே.சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் .செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.பார்த்திபன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து