முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சீரான போக்குவரத்து, திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர போலீஸ் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் சீரான போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகரில் 200 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான புரசைவாக்கம், வேளச்சேரி, தாம்பரத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், பொது மக்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.

 இம்மாதம் 18ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னையில் அதிகளவில் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்திற்கும், திருட்டு சம்பவங்கள் தடுக்கும் பொருட்டும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ..விசுவநாதன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில், 13ந் தேதி முதல் 18ந் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், தற்காலிக காவல் உதவி மையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் காவல் உதவி மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு போக்குவரத்து சீராக செல்லும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் ஆணையர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து அவர்களால் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தி.நகர்

பொருட்கள் வாங்க சென்னையிலேயே பொதுமக்கள் அதிகளவில் கூடும் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாம்பலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் 20 போலீசார் கொண்ட க்ரைம் ஸ்பெஷல் டீம் ஏற்படுத்தப்பட்டு சாதாரண உடையில் காவலர்கள் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பேருந்து வழித்தடங்கள், தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு என அனைத்து பகுதிகளிலும் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் 20 ஆண்/பெண் காவலர்கள் என தனிக்குழு அமைக்கப்பட்டு சாதாரண உடையில் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். தி.நகர் பகுதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் மாம்பலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் ரங்கநாதன் தெரு, போத்தீஸ் அருகில் மற்றும் குமரன் ஸ்டோர்ஸ் என 3 இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காண்காணிக்கப்படவுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் பணியிலிருக்கும் காவலர்கள் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பேனர்கள், உஸ்மான்ரோடு, ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படவுள்ளது.

உஸ்மான் ரோடு சந்திப்பு மற்றும் ரங்கநாதன் தெரு ரெயிலடி ஆகிய இடங்களி எல்இடி டிஸ்ப்ளே அமைக்கப்பட்டு, விழிப்புணர் வாசகங்கள் ஒளிபரப்பப்படவுள்ளது. குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்பு அளிக்காவண்ணம் பொதுமக்களை உஷார்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் இந்த இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலைய படிக்கட்டுகளின் வழியே ரங்கநாதன் தெருவிற்கும் அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு திரும்பவும் படிகளில் நடுவே தடுப்புகள் அமைத்து சிரமமின்றி நென்றுவர ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதே போன்று ரங்கநாதன் தெருவின் நடுவில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. உஸ்மான்ரோடுரங்கநாதன் தெரு சந்திப்பு, போத்தீஸ் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சாலையை கடப்பதற்கு கயிறுகள் பொருத்தப்படவுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அதை போத்தீஸ் சந்திப்பு அருகே நிறுவப்படவுள்ளது. காவல் உதவி மையம் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், வாணிமகால் மற்றும் வி.என்.சாலையில் அமைக்கப்படவுள்ளது.

புரசைவாக்கம்

புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு மற்றும் வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 230 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மேலும் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலும், வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும், வெள்ளாளர் தெரு சந்திப்பிலும் உள்ள காவல் உதவி மையங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் இந்த இடங்களில் 3 தற்காலி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெருக்கடி இல்லாமல் செல்வதற்கான பாதைகள் குறித்தும், திருடர்களிடமிருந்து பணம், நகை மற்றும் உடைமைகளை பாதுகாக்கா முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேள்சேரி

வேள்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1 ஆய்வாளர், 2 உதவி ஆய்வார்கள் மற்றும் 50 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்படவுள்ளது. இதர பகுதிகளில் செக்டார் ரோந்து அலுவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படவுள்ளது. வேளச்சேரி தரமணி லிங்க சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. 100 அடி ரோடு தரமணி லிங்க் ரோடு, விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், விஜய நகர் பேருந்து நிலையம் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. தரமணி லிங்க்ரோடு, சரவணா ஸ்டோர்ஸ் கடையிலிருந்து வேளச்சேரி ரெயில் நிலையம் வரும் பாதசாரிகள் நடந்துசெல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு விபத்து ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தாம்பரம்

தாம்பரம் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்னைக்குள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படா வண்ணம் சுழற்சி முறையில் காவலர்களை நியமித்து பொதுமக்களுக்கு போக்குவரத்தினால் பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். குறிப்பாக சண்முக சாலை, தில்லை நகர் பகுதி, தாம்பரம் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் பிக்கெட்டிங் போடப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

வண்ணாரப்பேட்டை

முக்கிய வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு போக்குவரத்து தடை செய்தல், குறிப்பாக ஜி..ரோடு, எம்.சி.ரோடு முழுவதும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனம் உள்பட போக்குவரத்திற்கு தடை செய்யப்படவுள்ளது. மேலும் காவல் துணை ஆணையாளர் தலைமையில் 149 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எம்.சி. சாலையில் அரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ், வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் முன்பும், ஜி.. சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும் எம்.சி. சாலை மற்றும் ஜி.. சாலையில் சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் எச்.1 வண்ணாரப்பேட்டை, எச். 3 தண்டையார்பேட்டை மற்றும் என்.1 ராயபுரம் காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பூக்கடை

முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான என்.எஸ்.சி. போஸ் சாலையில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 117 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையம் வெளிவாயில், குறளகம், பந்தர் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பு, என்.எஸ்.சி. போஸ் சாலை நாராயண முதலி தெரு சந்திப்பு மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்பன் தெரு சந்திப்பு ஆகிய 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வாங்கபடவுள்ளது.

03 புறக்காவல் நிலையங்கள் சி1, சி2 மற்றும் பி2 காவல்நிலையங்களில் நிறுவப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உடமைகள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 02 தீயணைப்பு வாகனங்கள் என்.எஸ்.சி போஸ் சாலை டெலிபோன் எக்சேஞ்ச், பந்தர் தெரு அருகில் நிலைநிறுத்தப்பட்டவுள்ளன. கூடுதலாக தற்காலிக கட்டுப்பாட்டறை பந்தர் தெருவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டவுள்ளது. மேலும் சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் சி1, சி2, பி1, பி2 என்3 மற்றும் சி3 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலகர்கள்குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தபடவுள்ளனர். மேலும் நகை வியாபாரிகள் சங்கத்தினர் வாயிலாக பல இடங்களில் சிசிடிவி கேமாராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

அண்ணாநகர்

கோயம்பேடு பேருந்து நிலையம், சி.எம்.பி.டி மதுரவாயல் மற்றும் திருமங்கலம் காவல் நிலையம் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக பேருந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல், பயணியர் உடைமைகள் பாதுகாப்பு உறுதி செய்தும், பயணியரை வரிசைப்படுத்தில் பேருந்தில் அமரச்செய்யவும் 16 செக்டார் பாதுகாப்பிற்காக, காவல் துணை ஆணையாளர் தலைமையில் 639 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும் அதில் கண்காணிப்பு கேமாராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபடவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் கே 10 கோயம்பேடு மற்றும் கே11 சிஎம்பிடி காவல் நிலையங்களின் சரகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டவுள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கே10, கே11, டி4 மற்றும் வி5 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாதவரம்

முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான செங்குன்றம் ஜி. என்.டி சாலையில் மாதவரம் மூலக்கடை சந்திப்பு, மணலி மார்க்கெட், மணலி புதுநகர், எண்ணூர் மற்றும் சாத்தாங்காடு மார்க்கெட் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 168 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபட்டவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாதாவரம் காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளான அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் ரோடு, துர்காபாய் தேஸ்முக் சாலை, சந்தோம் நெடுஞ்சாலை, பசுமைவழிச் சாலை, காமராஜர் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, கத்தீட்ரல் சாலை, எல்.பி. சாலை, ஆர்கே சாலை, சேமியர் சாலை ஈவிஆர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிரகாசம் சாலை, ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், சிடிஎச் சாலை, டிஎச் ரோடு, ஆகிய இடங்களில் ஒலிபெருக்கி கொண்ட ரோந்து வாகனங்களும் இழுவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 127 காவலர்களை நியமித்து போக்குவரத்து சீராக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து