முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா சபையை தற்காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

 நியூயார்க்: ‘‘கையளவு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட ஐநா அமைப்பை, தற்காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று இந்திய பிரதிநிதி வலியுறுத்தி பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபை கமிட்டியில், ‘தேசிய மற்றும் சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதன்மை செயலர் எட்லா உமாசங்கர் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:
ஒரு சில நாடுகள் உறுப்பினர்களாக இருந்த போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.நா ஆனால், தற்போது பல நாடுகள் இணைந்துள்ளன. அதற்கேற்ப பன்முகத்தன்மை, சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப ஐ.நா அமைப்பை, குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும். தற்காலத்துக்கு ஏற்ப, தற்காலத்தை பிரதிபலிக்க கூடிய அமைப்பாக ஐ.நா அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டம் எதுவாக இருந்தாலும், அதை நிலையானதாக விட்டுவிடக் கூடாது. தற்கால சமுதாய மாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இந்திய அரசியல் சட்டங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டவை. அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச தீவிரவாதம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சர்வதேச ஒத்துழைப்பை பெறவும், தீவிரவாதத்தை ஒடுக்கவும் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டியது அவசியம்.இவ்வாறு எட்லா உமாசங்கர் வலியுறுத்தி பேசினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களா உள்ளன. இந்த கவுன்சிலை விரிவுப்படுத்த இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து