முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை: இணை இயக்குநர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      திருநெல்வேலி

நெல்லை  மாவட்டத்தில் பிசான சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் மா. கனகராஜ் எச்சரித்துள்ளார்.   இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-நெல்லை  மாவட்டத்தில் ராபி பருவ சாகுபடியில் மானாவாரிப் பயிராக சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தின் பிரதான ஆணையான பாபநாசம் அணையில் பிசானப் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நெல் மற்றும் வாழை பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். வேளாண் உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா மற்றும் டிஏபி ஆகிய உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண் இடுபொருள்கள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் முதலியவற்றை விவசாயிகளின் தேவை அறிந்து போதிய அளவு வழங்கிட வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் பிரிமீயம் தொகையை விவசாயிகளிடம் பெற்று தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு முறையாக செலுத்திட கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் முன்னோடி வங்கியின் மேலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நெல்லை  மாவட்டத்தில் உள்ள உர உற்பத்தியாளர், உர மொத்த விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள தொகையை மட்டுமே செலுத்தி விவசாயிகள் உர மூட்டைகளை பெற வேண்டும்.மேலும், உரக்கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகை வைப்பதுடன் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளுக்குப் பிற தேவையற்ற இடுபொருள்களை கட்டாயத்தின் பேரில் வழங்கக் கூடாது. உரப் பைகளில் எக் காரணம் கொண்டும் எடைக் குறைவு இருத்தல் கூடாது. உரங்கள் வழங்கும்போது முறையாக விவசாயிகளிடம் கையொப்பம் பெற வேண்டும். வட்டார அளவில் தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் விற்பனை செய்வதை வேளாண்மைத் துறை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் ,இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து