ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் கட்டிட விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை: தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      அரியலூர்
2

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2016-17 கீழ் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய கட்டிட விரிவாக்கத்திற்கான பூமி பூஜை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் நேற்று (08.10.2017) நடைபெற்றது.

 

பூமிபூஜை

இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகாசி , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் , மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்துநிலையம் விரிவாக்கம் செய்யும்; பணி ரூ.3 கோடி மதிப்பீட்டில் 1.82 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ளது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஜெயங்கொண்டம் பேருந்துநிலைய விரிவாக்க பணிக்கான பூமி பூஜை இன்று அரசு தலைமைக்கொறடாவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்படவுள்ள பேருந்து நிலையத்தில், 25 பேருந்து பாந்துகள், 36 கடைகள், உணவகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் காத்திருக்கும் இடம், நேரம் காப்பாளர் அறை, முன்பதிவு மையம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வு அறை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வு அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பிடம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், காவலர் அறை, குடிநீர் வசதிகள், சாலைகள் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னர், ஜெயங்கொண்டம் நகராட்சியின் சார்பாக டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வகையான கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இன்று ஜெயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் நிலவேம்பு கசாயத்தினை பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு தலைமைக்கொறடா வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டினாகுமாரி, நகராட்சி ஆணையர் சங்கர், வட்டாட்சியர் வேல்முருகன், பொறியாளர் புகழேந்தி, பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரசாத், ஒப்பந்தக்காரர் புதுக்கோட்டை கருப்பையா மற்றும் ஊர் பொதுமக்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து