மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் ரூ.100 கோடியில் ‘ஜீவாமிர்தம்’ குடிநீர் திட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
ramnath govind launch 2017 10 9

கொல்லம் : மாதா அமிர்தானந்தமயி தேவி மடத்தின் சார்பில், ரூ.100 கோடியில் கிராமங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ‘ஜீவாமிர்தம்’ என்ற இத்திட்டத்தை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள வல்லிகாவு பகுதியில், ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்தமயி தேவியின் தலைமை ஆசிரமம் உள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த ஆசிரமத்தின் தலைவர் மாதா அமிர்தானந்தமயி, கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்தியா முழுவதும் கிராமங்களில் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர ரூ.100 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடி கிராம மக்களுக்கு நல்ல தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்துக்கு ‘ஜீவாமிர்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாதா அமிர்தானந்தமயி தேவியின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு, இத்திட்டத்தை மடத்தின் தலைமை அலுவலகத்தில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் சேவையே மகேசன் சேவை. நான் பதவியேற்றதும் காஷ்மீரின் மிக உயர்ந்த லடாக் பகுதிக்குச் சென்று நமது ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினேன். ஒரு பக்கம் நமது வீரர்களின் துணிச்சல், இன்னொரு பக்கம் நமது ஆன்மிக தலைவர்களின் கருணை, அன்பு, ஞானம் ஆகியவை 2 தூண்களாக உள்ளன.

கேரளாவில் ஆதி சங்கராச்சார்யா, ஸ்ரீ நாராயண குரு, அய்யன்கலி போன்ற உன்னதமான ஆன்மிக தலைவர்கள் இருந்துள்ளனர். நமது நாட்டில் ஆன்மிகம் தழைக்கும் மையங்களில் கேரளாவும் ஒன்று. கல்வி, சுகாதாரம் போன்றவை ஏழைகளுக்குக் கிடைக்க மாதா அமிர்தானந்தமயி செய்யும் சேவை மிகப்பெரியது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாதா அமிர்தானந்த மயி, கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். முன்னதாக திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த ஜனாதிபதி ராம்நாத்தை, ஆளுநரும் முதல்வர் பினராயி விஜயனும் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து