ஹஜ் யாத்திரை மானியத்தை ரத்து செய்ய புதிய வரைவு கொள்கையில் பரிந்துரை

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Haj pilgrimage 2017 10 9

புதுடெல்லி : முன்னாள் அரசு செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான குழு முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான வரைவு கொள்கையை (2018-22) தயாரித்துள்ளது. இது மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நக்வி மும்பையில் நேற்று கூறும்போது, “அடுத்த ஹஜ் யாத்திரை, புதிய கொள்கையின் அடிப்படையில் அமையும். இதில் யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளதுடன் வெளிப்படையானதாகவும் இருக்கும்” என்றார்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை படிப்படியாக ரத்து செய்யுமாறு கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இந்த புதிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த புதிய கொள்கையின்படி ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்து செய்யப்படும். மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண் துணையின்றி (தந்தை, சகோதரர், மகன்) யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்” என்றார்.

ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்து செய்வதன் மூலம் மிச்சமாகும் நிதி, முஸ்லிம்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும் யாத்ரீகர்களை கப்பல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்றும் இது விமானம் மூலம் அனுப்புவதற்கான செலவைவிட குறைவாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு கொள்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஆராயும். பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து