கேரளாவில் வன்முறை அரசியல்: கம்யூனிஸ்டுகள் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Amit Shah 2017 10 9

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன’’ என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக தொண்டர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவதாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை கண்டித்து பாஜக சார்பில் கேரளா மற்றும் மாநில தலைநகரங்களில் 2 வாரங்களுக்கு பாத யாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி தலைநகர் டெல்லியில் கனாட் பிளேஸில் இருந்து மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு நேற்று பாஜக பேரணி நடைபெற்றது.

இதில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:


கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. இது அவர்களின் இயற்கையான குணாதிசயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. உலகத்தில் இருந்து கம்யூனிஸ்டுகள் மறைந்து போவார்கள். இதே போல இந்தியாவில் இருந்து காங்கிரஸ் மறைந்துபோகும். 10 பேருடன் தொடங்கப்பட்ட பாஜக இன்று 11 கோடி தொண்டர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு பாஜக தலைவர் அமித் ஷா பேசினார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாசிச சிந்தனைகள் பரப்பப்படுகின்றன. இதனால் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. அவரது அரசின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதவாதம் தூண்டப்படுகிறது.

கேரளாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளுமே காரணம். அண்மையில் கேரளாவுக்கு சென்ற அமித் ஷாவுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர் பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிக்கு திரும்பிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து