முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 778 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணியினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2016-17 ஆம் கல்வியாண்டில்  பயின்ற  10,778  மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரத்து 220 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணியினை கலெக்டர் முனைவர் நடராஜன் முன்னிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியே நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்ந்து, கல்வித்துறையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து 14 வகையான மாணவர் நல கல்வி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் பொருளாதாரத்தில் உயர்வாக இருப்பவர்கள் மட்டுமே மடிக்கணினிகளை பயன்படுத்த முடியும் என்ற சூழலை மாற்றி ஏழை, எளியவர்களும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் நவீன யுக்திகளை கற்றறிந்து உலகளாவிய அறிவினைப் பெற்று  பயன்பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  மாணவ, மாணவியர்கள் மேலை நாடுகளுக்கு இணையான உலக தரம் வாய்ந்த கல்வியினை பெற்றிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 85 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2016 -2017 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மொத்தம் 10,778 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் இன்று வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1688 மாணவ, மாணவியர்களுக்கும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1043  மாணவ, மாணவியர்களுக்கும், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1447  மாணவ, மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 4178 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6,26,28,220 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மட்டுமல்லாது, சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வர விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை, சீருடை , காலணி, வண்ணப் பென்சில்லகள், விலையில்லா மிதிவண்டிகள், கல்வி ஊக்கத்தொகை, இலவச பேருந்துப் பயண அட்டைகள் உள்ளிட்ட 14 வகையான மாணவ, மாணவியர்களுக்கு  நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வம் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள்  விலையில்லா மடிக்கணினிகளை பயன்படுத்தி உலகத்தரத்திலான கல்வியினை பெற்று பயனடைய வழிவகை செய்கின்றது. தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்படுத்தி வரும்  பல்வேறு மாணவர் நல திட்டங்களை மாணவ மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து  உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் எஸ்.வி.ஏ (ம) மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளுக்கு அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் நேரடியாகச் சென்று விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.ஜெயஜோதி, ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் கோ.முத்துசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து