முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 1043 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலததில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற 1043 அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.

சான்றிதழ்கள்

 

இவ்விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங் வரவேற்புரையாற்றினார். இந்த அணிவகுப்பில் 25 உதவி கமாண்டர்கள், 310 துணை ஆய்வாளர்கள் மற்றும் 708 உதவி துணை ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர். இப்பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் உள்துறை அமைச்சர் பதக்கங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் பதக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் பேசியதாவது:- மத்திய தொழில் பாதுகாப்பு படை நம்முடைய இந்திய நாட்டில் கடந்த 48 வருடங்களாக பல மைல் கற்களை கடந்து வந்துள்ளது. இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மிக முக்கிய பங்கு எடுத்துள்ளது. இன்றைய காலத்தில் இவர்களுடைய பணி மிகவும் சவாலானது. இருப்பினும் இப்படை பிரிவு வீரர்கள் தங்களது பணியினை இந்திய நாட்டிற்காக மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர். இதுநாள் வரை இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை தனியார் நிறுவனங்களுக்கு தற்போது பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டின் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 5 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயரும். இந்தியா தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிர வாத அச்சுறுத்தல்களை அதிக அளவில் சந்தித்து வருகிறது. அதை இந்திய முறியடித்து வருகிறது. தற்போது தீவிரவாத தாக்குதல் விஞ்ஞான ரீதியில் உள்ளது. அதனையும் முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது.

புதிய தொழில் நுட்பம்

உலக அளவில் ஒரு துணை ராணுவமாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை விளங்கி வருகிறது. தற்போது இணைய தீவிரவாதம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இணைய தீவிரவாதம் என்பது ஒரு நாட்டின் இணைய தேவைகளை முடக்கி அதன்மூலம் அந்நாட்டின் நிர்வாகத்தை நிலை குலைய செய்வதாகும். இந்த இணையதள தீவரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை புதிய தொழில் நுட்பங்களை பற்றி அறிந்துக்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். நம்முடைய நாட்டில் காவல் துறை பணியில் தற்போது 5 சதவிகித பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதற்காக மத்திய அரசு காவல் துறை பணிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் துறைத் தலைவர் (பயிற்சி) ஜக்பீர் சிங், கமாண்டர் கார்த்திகேயன், பாராளுமன்ற உறுப்பினர்கள் இல.கணேசன், கோ.அரி, சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, காவல் கண்காணிப்பாளர் பகலவன், மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து