முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்துக்கழகங்கள் - மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட 3 லட்சத்து 69 ஆயிரம் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.489 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்பு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. உழைப்பாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தி நிறுத்துகிறது. அறிவியல் அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருந்தாலும், அதனை இயக்குவதும் செயல்படுத்துவதும் மனித ஆற்றல் தான். உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் உழைப்பாளர்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. உழைப்பாளியை ஊக்குவிக்கும் வகையில், ஊதிய உயர்வு, போனஸ், கருணைத் தொகை, ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

உச்சவரம்பு தளர்வு

தமிழ்நாடு அரசு, தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21,000 ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 10,000 ரூபாய் என இருந்த தகுதி வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது 21,000 ரூபாய் என்ற சம்பள உச்ச வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3,500 ரூபாய் என இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், 2016-17ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையினைக் கீழ்க்கண்டவாறு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

20 விழுக்காடு போனஸ்

லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

கூட்டுறவு, குடிநீர் வழங்கல் ஊழியர்கள்

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘ஊ’ மற்றும் ‘னு’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி" பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காட்டிற்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கருணைத்தொகை

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16800ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69ஆயிரத்து610 தொழிலாளர்களுக்கு 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து