அதிபர் டிரம்பால் 3-ம் உலகப் போர் மூளும்: அமெரிக்க எம்.பி. பாப் கார்கர் கருத்து

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      உலகம்
Bob Corker 2017 10 10

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்று ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா அண்மையில் சோதனை செய்தது. மேலும் அமெரிக்காவின் குவாம் தீவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது. இவை மட்டுமன்றி சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.


இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் செனட் சபை மூத்த எம்.பி. பாப் கார்கர், நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘பயிற்சி அதிபர் போல டொனால்டு டிரம்ப் செயல்படுகிறார். ரியாலிட்டி ஷோவில் பேசுவது போல ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வடகொரியா குறித்த அவரது சர்ச்சை கருத்துகளால் 3-ம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளது’’ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து