முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேளிக்கை வரி குறித்து அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை தொடரும்: விஷால் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, கேளிக்கை வரி விதிப்பு குறித்து சென்னையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூவுடன் நடிகர் விஷால் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை மேலும் நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் விஷால், திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் நேற்று தலைமை செயலகம் வந்தனர். அங்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருடன் கேளிக்கை வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எ,ஸ்.பி,வேலுமணி ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினோம். கேளிக்கை வரி ம்ட்டுமல்லாமல் இதர கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒருசுற்றுபேச்சுவார்த்தை நடந்தது. முதல்வரிடம் இந்த கோரிக்கைகளை எடுத்துச்சென்று மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். நாளை அல்லதுநாளை மறுநாள் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். மல்டிபிளக்ஸ், ஊராட்சி, பேரூராட்சிகளில் திரையரங்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. ஆனால், கேளிக்கை வரியை அதிகமான சுமையாக நினைக்கிறோம் என பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தோம். ஏற்கெனவே ஜி.எஸ்.டி., இருக்கிறது.

இதையும் தாண்டி கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் சினிமா தொழில் பாதிக்கப்படும் என பேசியுள்ளோம். தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். எங்களுடன் நடிகர் கருணாஸ்சும் வந்திருந்தார். அவரும் எங்களது கோரிக்கைகளை எதிரொலித்தார். இந்த பிரச்சனை மீது நாளை அல்லது நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவினை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக மீண்டும் ஒருசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதுமில்லை.  தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து