முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கினர் : டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை ஓழித்துக்கட்ட 40 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் உள்ளதாகவும், சென்னையில் மட்டும் ஆட்டோக்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தடுக்க நடவடிக்கை

காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்திடவும், முற்றிலுமாக தடுத்திடவும் தமிழக அரசு எண்ணற்ற தொடர் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பதும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி பகல் பொழுதில் கடிக்கும் “ஏடிஸ்” வகை கொசுவினால் பரவுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளைச் கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதால் ஏடிஸ் வகை கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

களப்பணியாளர்கள்

தமிழக மக்களை டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூபாய் 13 கோடியே 95 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் 40,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் (மஸ்தூர்கள்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேகமான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும், காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் எலிசா முறையில் டெங்குகாய்ச்சலை கண்டுபிடிக்கும் மையங்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம்.

சிறப்பு பயிற்சிகள்

புதிதாக ரூ.23.50 கோடி மதிப்பில் 837 இரத்த அணு அளவீட்டுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவையான பரிசோதனைக் கருவிகள், மருந்து மாத்திரைகள், இரத்தம், இரத்த தட்டணுக்கள் ஆகியவற்றின் இருப்புகளை அரசு தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது. தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும், தனியார் மருத்துவர்களுக்கும் தொடர் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர்

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 2000 கிலோ நிலவேம்பு பொடி டாம்ப்கால் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் கஷாயமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் 35 ஆட்டோக்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு தினம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2-ம் தேதி  நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில்பள்ளிகளில் டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எல்.ஈ.டி. திரை வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு வீடியோ படக்காட்சியினை ஒளிபரப்பு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பேரணி போன்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருந்து கடை உரிமையாளர்கள், உணவு வணிகம் செய்பவர்களுடன் ஆலோசானை கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், நீலவேம்பு குடிநீர் வழங்குதல், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள்  83, 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன் படி, சட்டப்படி உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து