முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

* 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஏற்பு * முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு - அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இனி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700-ம், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000-ம் இருக்கும். இந்த ஊதிய உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனுடன் அமுல்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

‘அலுவலர் குழு’ பரிந்துரைகள்

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

புதிய ஊதிய உயர்வு

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, எனது தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் நடைபெறும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு ஊதியம் உயர்வு

மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

30 சதவிகித ஊதிய உயர்வு

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிக பட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியம்

இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தஅறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரெண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து