முதல்வர் பழனிசாமிக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை பிரதமரை சந்தித்த பின் டெல்லியில் துணை முதல்வர் பேட்டி

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      தமிழகம்
ops

புதுடெல்லி: முதல்வர் பழனிசாமிக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்த பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றார்
கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நடந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச அனுமதி கேட்டார். ஆனால் அன்றைய தினம் டெல்லியில் பிரதமர் மோடிக்கு பல்வேறு தொடர் பணிகள் இருந்ததால் அவருக்கு சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அன்று பிரதமர் மோடியை சந்திக்க முடியா மல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

பிரதமருடன் சந்திப்பு
இதையடுத்து நேற்று சந்தித்துப் பேச பிரதமர், ஓ.பி.எஸ்.சுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் சென்றனர். நேற்று பகல் 11 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் அலுவலகத்துக்குப் புறப்பட்டு சென்றார். பின் 11.30 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.


இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது மோடியிடம் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஓ.பன்னீர் செல்வம்  விரிவாக பேசியதாக தெரிகிறது. துணை முதலவராக பொறுப்பேற்ற பிறகு ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.

நிலக்கரியை வழங்க...
பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் மின் தேவை குறித்து முதல்வர் அளித்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன்.தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மன வருத்தம் இல்லை
பிரதமர் மோடியிடம், அரசியல் குறித்து பேசவில்லை. முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை. அ.தி.மு.க.வில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வில்  இனி கீழ்மட்டத்தில் இருந்து வந்தால் தான் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து அறிய  மத்திய அரசு மருத்துவக் குழுவை தமிழகத்திற்கும் அனுப்பும்  என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.என்னையும் அமைச்சர்களையும் கலந்து பேசியே முதல்வர் பழனிசாமி முடிவெடுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து