ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 31-க்குள் இடைத்தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      இந்தியா
election-commission 2017 10 1

புதுடெல்லி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. மேலும் இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம் முடக்கம்

ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே.நகர் தேர்தல் காலியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெறவிருந்த இரு நாள்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


டிச. 31-க்குள் தேர்தல்

இந்நிலையில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோஷி வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரு மாநிலங்களுக்கு...

குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 22-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதே போல இமாச்சலபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 7-ம் தேதி முடிவடைகிறது. இதனால் இந்த இரு மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது. 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2012-ம் ஆண்டு இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 26 இடங்கள் கிடைத்தது.

ஒரே கட்டமாக தேர்தல்

இந்நிலையில், இங்கு நவம்பர் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக பெண்களே முழுவதுமாக 136 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவார்கள் என்றும் ஜோஷி கூறினார். அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில தேர்தல் தேதி திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

இமாச்சல் தேர்தல் முக்கிய தேதிகள்:-

செப்.16-ம் தேதி - வேட்பு மனுதாக்கல்.

செப்.23-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் முடிவு.

செப்.24-ம் தேதி -  வேட்புமனு வாபஸ்.

செப்.26-ம் தேதி - இறுதி வேட்பாளர் பட்டியல்.

நவ.9-ம் தேதி - தேர்தல்.

டிச.18-ம் தேதி - முடிவுகள் அறிவிப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து