முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் அறிவுரை

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க கலெக்டர் முனைவர் நடராஜன் அறிவுரை வழங்க pஉள்ளார்.
      மக்களுக்கு தீமைகள் செய்து வந்த நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில், தீபங்களுடன் தீபாவளியினை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பதும்  காலம் காலமாக நம்மிடையே பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். ஆனால், பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிரந்தமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வண்ணம் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மாண்புமிகு உச்சநீதி மன்றம், 2005 ஆண்டு பிற்ப்பித்த உத்தரவில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்துள்ளது. மேலும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்து, பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  வலியுறுத்தியுள்ளது. மேற்படி உத்திரவினை சரிவர அமல்படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றம்  2015-ல் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
      அதன்படி தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும், ஆண்டுதோறும் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடையே பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆண்டு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசுரங்கள் பள்ளி மாணவர்களிடையே வழங்கப்பட உள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்படவுள்ளது.
        சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் 125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், மாண்புமிகு உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளையும்  விற்பனை செய்யக்கூடாது. பொது மக்கள் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே  வெடிக்க வேண்டும்.   தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்குகந்த வகையில் ஒளியின் திருநாளாம்  தீபாவளியினைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து