முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் - பாட்னா விழாவில் பிரதமர் மோடி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா : நாடு முழுவதும் முன்னணியில் உள்ள 20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், மெகா கூட்டணியிலிருந்து கடந்த ஜூலை மாதம் வெளியேறினார். பின்னர் பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று பிஹாருக்கு சென்றார். இதையடுத்து முதல்வர் நிதிஷ் குமார் பாட்னா விமான நிலையத்துக்கே சென்று மோடியை வரவேற்றார்.

10 அரசு பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். ஆனால், உலகத் தரத்தை எட்டுவதற்கான தகுதி இருக்கிறதா என்று பல்கலைக்கழகங்கள் நிரூபிக்க வேண்டும் - பிரமதர் மோடி

பின்னர் பாட்னாவில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் தொடக்க உரையாற்றிய நிதிஷ் குமார் பேசும்போது, “பாட்னா பல்கலைக்கழகத்துக்கு ‘மத்திய பல்கலை.’ அந்தஸ்து வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் முதல் 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வரும் காலங்களில் இந்தப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற வேண்டுமானால், பழைய கற்பித்தல் முறையைக் கைவிட்டு புதிய முறைகளை புகுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

பாட்னா பல்கலைக்கழகத்துக்கு ‘மத்திய பல்கலை’ அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்தார். அதெல்லாம் இப்போது பழங்கதையாகி விட்டது. அதற்கு ஒரு படி மேலே போய், உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, 10 தனியார் மற்றும் 10 அரசு பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். ஆனால், உலகத் தரத்தை எட்டுவதற்கான தகுதி இருக்கிறதா என்று பல்கலைக்கழகங்கள் நிரூபிக்க வேண்டும். இந்தப் பட்டியலை பிரதமரோ முதல்வரோ தேர்ந்தெடுக்கமாட்டார். மாறாக, இத்துறை சார்ந்த நிபுணர்கள்தான் தேர்ந்தெடுப்பர். அந்த வகையில் பாட்னா பல்கலைக்கழகத்துக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் 65 சதவீத மக்கள் அதாவது சுமார் 80 கோடி பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இளம் தலைமுறையினரை வைத்துக் கொண்டு நம்மால் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள பிகார் அருங்காட்சியகத்துக்கு சென்றார். அப்போது முதல்வர் நிதிஷ் குமாரும் உடன் இருந்தார்.
பின்னர் பாட்னாவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள மொகமா பகுதிக்குச் சென்ற மோடி, அங்கு நெடுஞ்சாலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “கடந்த ஆட்சியின்போது தொடங்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து