முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி தேடித் தரவேண்டும் - அ தி.மு.க. தொண்டர்களுக்கு ஒ.பி.எஸ்- இ.பி.எஸ் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ தி.மு.க. 46வது ஆண்டு துவக்க விழாவையொட்டி  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு மடல் எழுதி உள்ளனர்.   அ தி.மு.க.வை வீழ்த்தவோ எதிர்த்து நிற்கவோ, தமிழ்நாட்டில் ஒரு தனி மனிதனோ, இயக்கமோ ஒருபோதும் தோன்ற போவதில்லை என்று அந்த மடலில் கூறியுள்ளனர்.  மேலும்  உள்ளாட்சி தேர்தலில் மகத்தான  வெற்றி தேடித் தரவேண்டும் என்றும் அ தி.மு.க.  தொண்டர்களுக்கு  அவர்கள்  கடிதம் எழுதியுள்ளனர்.

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியிருப்பதாவது:–

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மலின் அரசியல் வாரிசு புரட்சித் தலைவி அம்மாவின் அன்புக்குரிய அ தி.மு.க.வின் கோடானக் கோடி உடன்பிறப்புகளின் மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி உங்கள் அன்புச் சகோதரர்களின் பாசமிகு மடல்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தமிழக மக்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். அ தி.மு.க.வை தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும் நம் ஒவ்வொருவரது கரங்களிலும் தரப்பட்டிருக்கும் இந்த தருணம் கழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேரம்.1972ம் ஆண்டு நம் அன்புக்குரிய எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் ஒரு மகத்தான திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த அக்டோபர் மாதத்து நிகழ்வுகள் நம்மில் பலருக்கும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கும். அண்ணா வகுத்துத் தந்த அரசியல் பாதையிலிருந்து விலகி ஒரு தனி மனிதனின் தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் பலியிடப்படும் இயக்கமாக அண்ணாவின் இயக்கம் கொஞ்சம், கொஞ்சமாய் மாற்றப்படுவதையும் ஒரு குடும்பத்தின் நலனுக்காக அண்ணாவின் இயக்கம் சிதைக்கப்படுவதையும் எதிர்த்துக் குரல் எழுப்பியதற்காக தமிழக மக்களின் பேரன்பை பெற்ற புரட்சித் தலைவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். புரட்சித்தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு தமிழகமே வெகுண்டு எழுந்தது. எங்கு பார்த்தாலும் போராட்டங்களும், மக்கள் புரட்சியின் வெளிப்பாடாகவும் இருந்த நேரம் அது.

தந்தை பெரியாரின் உழைப்பும், அண்ணாவின் அறிவும் உருவாக்கிய எழுச்சியும், விழிப்புணர்வும் வீணாகிவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிக கண்ணும் கருத்துமாக இருந்தார். உளுந்தூர்பேட்டை நகரின் மையப்பகுதியில் இஸ்மாயில் என்ற எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் 1972ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எம்.ஜி.ஆர். வாழ்க” என்று உரத்த குரலில் முழக்கமிட்டபடி தன் உடலுக்கு தீவைத்துக் கொண்டு இன்னுயிர் நீத்த செய்தி தமிழ்நாட்டையே உலுக்கியது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை உருவாக்கி தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார்.

உயிருக்கு நிகரானது

புரட்சித் தலைவரின் அன்புத் தம்பிகளாக எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாகவும், அவரது ரசிகர்களாகவும், அவர் மீது அன்பு கொண்டவர்களாகவும் நம்மில் பலர் புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொண்டோம். இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு புரட்சித் தலைவர் பட்ட பாடுகள் கொஞ்சமா? அவரது அன்புத் தம்பிகள் ஏற்றுக்கொண்ட துயரங்கள் தான் சொல்லில் அடங்குமா? பூலாவரி சுகுமாரன், வத்தலகுண்டு ஆறுமுகம் என்று எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்! எத்தனை ஆயிரம் வழக்குகள் புரட்சித் தலைவர் மீதும் அவரது அன்புச் சகோதர, சகோதரிகள் மீதும்! அவை அத்தனையையும் தாண்டி, புரட்சித் தலைவரின் உழைப்பாலும், அள்ளித் தருகின்ற அவரது உள்ளத்தாலும், அவரது அன்பு உடன்பிறப்புக்களின் தியாகத்தாலும், உழைப்பாலும் வளர்ந்து ஆட்சிக்கு வந்த ஒப்பற்ற அரசியல் இயக்கம் நம் உயிருக்கு நிகரான அண்ணா தி.மு.க..

இரும்பு கோட்டை

புரட்சித் தலைவருக்காக எந்த தியாகத்தையும் செய்ய எப்பொழுதும் காத்திருந்த எண்ணற்ற கழகத் தொண்டர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கட்டி வளர்த்த இயக்கம் என்பதால்தான் கழகம் இரும்புக் கோட்டையாக இன்றும் நிற்கிறது.

ஏழை, எளிய மக்களையும், உழைக்கும் மக்களையும், தாய்குலத்தையும் உளமார நேசித்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட அரும்பாடுபட்டு ஆட்சி நடத்தினார் புரட்சித் தலைவர். அவரது மறைவுக்குப் பின் கழகத்தை வழி நடத்திட கடவுள் தந்த கொடையாக வாழ்ந்தவர் புரட்சித் தலைவி அம்மா.

சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளையெல்லாம் வென்று, இந்திய அரசியல் அரங்கில் தனது ஒப்பற்ற அறிவாலும், ஓய்வறியா உழைப்பாலும் கழகத்திற்கு தனிப்பெரும் மரியாதையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் அம்மா.

எத்தனை சோதனைகள்

ஒவ்வொரு நாளும் தனக்கு ஏற்படும் அனுபவங்கள் பலவற்றை கழக பொதுக்குழு கூட்டங்களிலும், கழக முன்னோடிகளை நேரடியாக சந்தித்து மனம்விட்டுப் பேசிய தருணங்களிலும் அம்மா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். எவ்வளவு சோதனைகளுக்கு மத்தியில் அம்மா வாழ்ந்து வந்தார். எவ்வளவு ஏமாற்றுதல்களையும், துரோகங்களையும் ஒவ்வொரு நாளும் அவர் சந்தித்து மனவேதனையுடன் வாழ்ந்து வந்தார் என்பதை அம்மா நமக்கெல்லாம் இலைமறை காயாகவும், இதயத்தின் வேதனைகளை மறைத்துக் கொண்டும் நம்மிடம் கூறினார் என்பதை எண்ணிப் பார்க்கிறோம். அந்த புனிதத் தலைவியின் தியாகத்தால் அல்லவா இன்று கழகம் இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது!

அம்மா கண்முன் ஒரு நாடகம்; முதுகுக்கு பின் ஒரு நாடகம்

அம்மா முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட முடியாமல் வாழ்வதற்கு காரணமாயிருந்தவர்கள் இன்று கழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள். அம்மாவின் கண்முன் ஒரு நாடகமும், முதுகுக்குப்பின் ஒரு நாடகமுமாக நயவஞ்சக வாழ்க்கை வாழ்ந்தவர்களை அம்மா நாளும் வணங்கிய கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்பதுதான் இன்று மக்களின் கருத்தாக உள்ளது.

அம்மா அண்ணா தி.மு.க. ஆயிரம் காலத்துப்பயிர் என்றார். கழகம் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்தி தமிழக மக்களுக்குத் தொண்டாற்றும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். உழைப்பவரே உயர்ந்தவர் என்றும் கழகத்திற்காக உழைக்கும் ஒவ்வொருவரும் அதற்கான நற்பலனைப் பெறாமல் போகமாட்டார்கள் என்றும் பலமுறை சொல்லிலும், செயலிலும் உறுதி படுத்தியவர் அம்மா. ஜெயலலிதா லட்சியத்தை நிறைவேற்றுவோம்

அம்மா கழகத்தின் மக்கள் நல ஆட்சிக்கும், அரசியல் பயணத்திற்கும் தெளிவான இலக்கணத்தையும், உறுதியான பாதையையும் அமைத்துத் தந்திருக்கிறார். அம்மாவின் தியாகத்தை உளமார மதித்து, வணங்கி அவர் வழியில் பயணிக்க புது உரு எடுத்திருக்கும் கழக அமைப்பும், கழக ஆட்சியும் அம்மாவின் இலட்சியங்களை நிறைவேற்ற அயராது பாடுபடும் என்ற உறுதிமொழியை இந்நேரத்தில் கழக உடன்பிறப்புகளுக்கு அளிக்கிறோம்.அம்மா மீது பல பொய் வழக்குகளைப் போட்டு அவர் மனவேதனைக்கும், உடல் நோவுக்கும் ஆளாகக் காரணமாய் இருந்த நம் அரசியல் எதிரிகளோடு கடந்த சில மாதங்களாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கழக அரசை கலைத்திட நினைத்தவர்களின் சதிச் செயல்களை முறியடித்திருக்கிறோம்.

நயவஞ்சக நாடகம்

கள்ளத்தனமாய் வணிக உறவுகளை வைத்திருந்தவர்கள் இப்போது அம்மா உருவாக்கிய அரசைக் கலைக்க அரசியல் உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டு நயவஞ்சக நாடகம் ஆடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்லவேளை இவர்களைப் பற்றி எத்தனையோ முறை கழகத்தாரையும், தமிழக மக்களையும் புரட்சித் தலைவி போதுமான அளவுக்கு எச்சரிக்கைகள் செய்திருக்கிறார். இவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடிதர வேண்டும்

அம்மாவின் தலைமையில் கழக உடன்பிறப்புக்கள் கட்டுப்பாட்டுடனும், கடமை தவறாமலும் பணியாற்றியது போல எப்பொழுதும் கழகத்திற்கு விசுவாசமாய் இருந்து பணியாற்றி எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று கழகம் தோன்றிய இப்பொன்னான தருணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகாணும் பயிற்சியை எம்.ஜி.ஆரும், அம்மாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை வீழ்த்தவோ, எதிர்த்து நிற்கவோ தமிழ்நாட்டில் எந்த ஒரு தனி மனிதனோ, இயக்கமோ ஒருபோதும் தோன்றப்போவதில்லை.

அம்மா அவர்கள் சூளுரைத்தவாறு கழகம் ஆயிரம் காலத்துப் பயிராகத் தழைத்திட உறுதி ஏற்போம்! கழக அரசு இன்னும் பல நூற்றாண்டு தொடர உழைப்போம்!

அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க! அம்மாவின் புகழுக்கு பெருமை சேர்ப்போம்!

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், கழக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து