முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது - மத்திய அமைச்சர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில்  தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது  என்று முதல்வர் எடப்பாடியை   சந்தித்த பின்  மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மத்திய குழுவிடம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.256.33 கோடி கோரிய கோரிக்கை மனுவின் நகலினை மத்திய இணை அமைச்சரிடம்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நல வாழ்வு குழுமத்தின் இயக்குனர் தரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன்பிறகு  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கபடுகிறது. டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே நேற்று ஆய்வு நடத்தினார். நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் குமார் செளபே , தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  தமிழக அரசிடம் ஆலோசித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை அமையும் இடம் 3 மாதத்தில் தேர்வு செய்யப்படும். இந்த இடத்தை முதல்வரும், அமைச்சர்களும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து