முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகளில் டெங்கு ஆய்வுக்கு வருபவர்களை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை கலெக்டர் வெங்கடேஷ் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தூத்துக்குடி
வீடுகளில் டெங்கு தொடர்பாக ஆய்வு நடத்தவரும் அதிகாரிகளை தடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, கோவில்பட்டி என இரு சுகாதார மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆகியவை தூத்துக்குடியிலும், கோவில்பட்டி விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,105 பேர் டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 205 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில், புன்னக்காயலில் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம், இலுப்பையூரணி பகுதியில் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் வீடுகளின் முன்பு குழி தோண்டி சாக்கடை நீரை தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், அதிகளவு கொசு உற்பத்தி ஆகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதால், அந்த குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாயர்புரம் பகுதியில் வீடுகளில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தாக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால், இபிகோ 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தவிட்டுள்ளேன். தூத்துக்குடி மாவட்டத்தில் எனக்கு தெரிந்த வரையில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் வடகாலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது கடைசி பாசனமாக இருப்பதால் இன்னும் ஒரு சிலதினங்களில் தண்ணீர் வந்துவிடும். விவசாயிகள் அச்சம் அடையத் தேவையில்லை. தற்போது பாபநாசம் அணையில் 79 அடி தண்ணீர் உள்ளது. மழை பெய்தால் பிரச்சனை இல்லை. மழை பெய்யாவிட்டால், இருக்கும் தணணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் ஆகியோர் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து