முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத இறைச்சி கூடத்தை அம்பலப்படுத்திய பெங்களூரு பெண் பொறியாளர் மீது தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, பெங்களூரு அருகே சட்டவிரோதமாக இயங்கிய இறைச்சி கூடம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்த பெண் மென்பொறியாளர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கோரமங்களாவை சேர்ந்த நந்தினி (45) தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது நண்பர் செஜில் (38) என்பவரை சந்திப்பதற்காக தலகாட்புராவுக்கு சென்றார். அங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டதைக் கண்டார். அங்கு அடைக்கப்பட்டுள்ள 14 மாடுகளை மீட்குமாறு தலகாட்புரா காவல் நிலையத்தில் நந்தினி புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக நந்தினி கூறியபோது, “நான் போலீஸாரிடம் புகார் அளித்தபோது அந்த இறைச்சி கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க 15 போலீஸார் அங்கு சென்றுள்ளனர். தேவைப்பட்டால் நீங்களும் நேரில் சென்று பாருங்கள் என கூறினர். எனது பாதுகாப்புக்காக 2 காவலர்களுடன் இறைச்சி கூடத்தின் உள்ளே நுழைந்தேன். அங்கு போலீஸார் யாரும் இல்லை.

30 பேருக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு கும்பல் எங்களை கற்களால் தாக்கியது. இதைக் கண்ட காவலர்கள் அங்கிருந்து தப்பியோடினர். நானும் எனது நண்பர் செஜிலும் ஓடி போய் காரில் ஏறிக் கொண்டோம். எங்களை வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கியதில் எனக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. எனது நண்பர் செஜிலுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த கும்பல் தொடர்ந்து கற்களை வீசி தாக்கியதில் கார் சேதமடைந்தது.

நான் புகார் அளித்தபோதே, போலீஸார் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. நாங்கள் காயமடைந்த பின்னரே, போலீஸார் எனது புகாரில் கவனம் செலுத்தியுள்ளனர். சட்ட விரோத இறைச்சி கூடம் நடத்தியவர்கள் மீதும், எங்களை தாக்கியவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் தலகாட்புரா போலீஸார் மர்ம கும்பல் மீது சட்ட விரோத இறைச்சி கூடம் நடத்தியது, பெண் பொறியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இறைச்சி கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து