முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலை நாட்டின் வளர்ச்சி வீழ்த்தும்: பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலை, வளர்ச்சி அரசியல் தோற்கடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் ஜனவரி 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் டிசம்பர் 18-ம் தேதிக்கு முன்பாக சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் தரப்பில் இப்போதே தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 1995 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சியின் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா தனிக் கட்சி தொடங்கி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். பின்னர் 1998 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வராகப் பதவியேற்றார்.

அதன்பின் 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22-ம் தேதி வரை நரேந்திர மோடி முதல்வராகப் பதவி வகித்தார். அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற ஆனந்திபென் படேல் 2016 ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பதவியில் நீடித்தார். தற்போது முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் 5-வது முறையாக குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ‘குஜராத்தின் கவுரவம்’ என்ற பெயரில் கடந்த 1-ம் தேதி பா.ஜ.க சார்பில் மாநிலம் தழுவிய பேரணி தொடங்கப்பட்டது. இந்தப் பேரணி நேற்று அகமதாபாத்தை வந்தடைந்தது. அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மக்கள் விரோத கொள்கைகளைப் பின்பற்றியது. சர்தார் சரோவர் அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகே அணை திட்டம் முழுமை பெற்றது. பா.ஜ.க.வை பொறுத்தவரை வளர்ச்சியை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறோம். அதேநேரம் காங்கிரஸ் வாரிசு அரசியலை முன்னிறுத்துகிறது. வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலை, வளர்ச்சி அரசியல் தோற்கடிப்பது உறுதி. மத்தியில் பா.ஜ.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஊழலை ஆதரிக்கும் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து