முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுகின்ற ஓர் இந்துப் பண்டிகையாகும். ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப் பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும். கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17-லிருந்து நவம்பர் மாத 15 ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
 
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்துவிட்டு, தனது வனவாசத்தையும் முடித்துவிட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இநநாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது. இத்தினத்தில் தான் விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.  இரண்யாட்சன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச்சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள்.

அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தியபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.  நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்க மடைந்தது போல நடித்தார்.

தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார். நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகனை தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும்.

இன்றைய தினத்தில் செய்யப்படும் எண்ணைக் குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம்வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள் நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு இட்டு மகிழ்வர். பின் எண்ணெய் குளியல் செய்வர். நல்லெண்ணையில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டியும் உடுத்துவர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம்  அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும் தணணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

அன்றைய தினம் எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் ‘கங்காதேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாக கொண்டாடி வருகின்றனர். மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் பொற்கோவில் கட்டுமான பணிகள் கி.பி.1577ம் ஆண்டு இந்நாளில் துவங்கியதை  கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று குபேரனுக்கு பூஜை செய்கின்றோம். கிழக்காசிய நாடுகளிலும் குபேரனை வணங்கி வழிபடுகின்றனர். இந்நாடுகளில் சிரித்த முகத்துடனும், பெரிய தொப்பை, கனத்த உருவத்துடன் பொன் மூட்டைகளைத் தாங்கி நின்றவராகவும் அநேக ஆபரணங்கள் அணிவித்து தங்க நிறத்துடன் கூடிய குபேரனை ஆராதிக்கின்றனர். தீபாவளி அன்று நம் வட இந்தியாவில் மிக விமர்சியாக குபேர பூஜை கொண்டாடப்படுகிறது. குபேரனுக்கு மிகவும் பிடித்தமான மலர்களால் அலங்கரித்து, இனிப்பு வகைகள் படைத்து கொண்டாடுகின்றனர். மேலும் இன்றுதான் அவர்கள் வைத்திருக்கும் மூலதனங்களாகிய பணக்கட்டுகளை குபேரன் முன்பு அடுக்கி வைத்து பூஜை செய்து புது கணக்கை துவங்குகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து