முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நிலவேம்பு' கசாயத்தால் எந்த பக்க விளைவும் ஏற்படாது சிங்கப்பூர், மலேசியா நாடுகள் நிலவேம்பு குடிநீரை கேட்டுள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: 'நிலவேம்பு' கசாயம் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்றும், சிங்கப்பூர், மலேசியா நாடுகள் நிலவேம்பு குடிநீரை கேட்டுள்ளன என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்
திருச்சி மகாத்மா காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் நல்ல மருந்து. அது தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஆய்வுகூடமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டும் நிலவேம்பு கசாயம் டெங்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. நிலவேம்பு கசாயம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. முழுமுழுக்க நில வேம்பு ரசாயன முறையில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னே பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெங்குவை கட்டுப்படுத்த வருவாய் துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேண்டுகோள்
தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் திருச்சியில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது.பொது மக்கள் காய்ச்சல் என்று தெரிந்த உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடக்கூடாது என கடுமையாக கூறி வருகிறோம். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்யும் ரத்த அணுக்கள் பரிசோதனை கருவி அவசியம் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ரூ.23 கோடியே 50 லட்சம் செலவில் 837 ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யும் கருவி வைத்துள்ளோம். அந்த மருத்துவமனையின் முதல்வர்கள் கேட்டுக்கொண்டால் கூடுதல் கருவிகளை அளிக்க தயாராக உள்ளோம். தாமதமாக வராமல் உடனடியாக அரசு மருத்துவ மனையை நாடும் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்தப்படுகிறார்கள். டெங்கு இருக்கிறது என்று தவறான முடிவுகள் தரும் தனியார் ரத்த பரிசோதனை ஆய்வு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பக்க விளைவுகள் இல்லை
பின்னர் தஞ்சை சென்ற அவர் அங்கு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நில வேம்பு கசாயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கசாயத்தை கேட்டுள்ளன. 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கண்டனம்
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.145 லட்ச ரூபாய் செலவில் புறநோயாளிகள் ஒருங்கிணைந்த கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.,
நிலவேம்பு கசாயம் குறித்து பேசுவதற்கு நடிகர் கமல்ஹாசன் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது. நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்க அரசு அறிவுறுத்தி வருகிறது. பருவகாலமாற்றத்தினால் நோய்கள் வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து விளம்படத்தில் நடிக்க சொன்னால் நடிகர் கமலஹாசன் நடிப்பார். ஆனால் தனிப்பட்ட முறையில் இப்படித்தான் பேசுவார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் பீதியை ஏற்படுத்தி வருகிறார்.இது போன்று பேசுவதை நடிகர் கமல்ஹாசன் மட்டுமல்லமால் யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.

அரசு நடவடிக்கை
டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் வந்தவுடன் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வர வேண்டும். இரத்த தட்டணுக்கள் குறைவதை கண்டறிய அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு 24 சாதனங்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து