முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் தங்கள் நாட்டில் முறைகேடாக சேர்த்த சொத்துகளை வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அதில் பல உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி நவாஸ் ஷெரீபின் பிரதமர் பதவியைப் பறித்தது. மேலும், நவாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹசன், ஹுசைன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை ஆணையம் (என்ஏபி) நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகளை பதிவு செய்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இதனிடையே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது தலைமை வழக்கறிஞர் கவாஜா ஹாரிஸ் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகனும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான கேப்டன் முகமது சப்தார் ஆகிய 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்ற சப்தார் தரப்பு வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நவாஸ் ஷெரீபின் வழக்கறிஞர் ஆயிஷா ஹமீது தாக்கல் செய்த மனுவில், “என்ஏபி சார்பில் பல்வேறு ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து நவாஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதால், குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து