முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு ஒழிப்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் ஒத்துழைக்காதவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசணை கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து பொதுசுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் என்ற கொசுவினால் இவ்வைரஸ் காய்ச்சல் உருவாகின்றது.  எனவே ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதன் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்திட முடியும். 
 அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர்கள் மூலமாக சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.  மேலும் கொசுப்புழு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கான களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
 குறிப்பாக மூடி இடாமல் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள தண்ணீர் தொட்டிகள், பராமரிப்பு இல்லாத கிணறுகள், நீண்ட நாள் தண்ணீர் தேக்கி வைத்துள்ள நீர்த்தொட்டிகள், வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து சாத்தியக்கூறு உள்ள இடங்களையும் ஆய்வு செய்து கொசுப்புழு ஒழிப்பினை நூறு சதவீதம் உறுதி செய்திட வேண்டும்.  இத்தகைய களப்பணிகளில் பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களையும் ஒருங்கிணைத்து ஈடுபடுத்திட வேண்டும். 
 மேலும் வணிகர்கள், விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் கொசுப்புழு உருவாகாமல் தூய்மையாக பராமரிப்பதை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கள ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.  இதுதவிர மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள், வாகன பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு இடங்களிலும் கொசுப்புழு உருவாகாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொசுப்புழு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு தூய்மையாக பராமரிக்காமல் கொசுப்புழு உருவாவதற்கு இடமளிக்கும் உரிமையாளர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   ஆகவே அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மாவட்டத்தில்  டெங்கு வைரஸ் பாதிப்பினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் ஒருங்கிணைத்து தொடர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.மீனாட்சி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷண்வேணி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து