முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் தற்போது 22.1 சதவீதம் தண்ணீர் இருப்பு வேளாண்மைத்துறை அதிகாரிகள் தகவல்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் தற்போது 22.1 சதவீதம் தண்ணீர் இருப்பதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.6 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.6 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருந்தது.

இம்மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 629 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே அணைகளில் இருந்தது. தற்போது 3,049.44 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

மொத்தமாக அணைகளில் கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.6 சதவீதம் நீர் இருப்பு காணப்பட்டது. தற்போது 22.2 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

அணைகளில் நீர்மட்டம்
அணைகளில் நேற்றைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் விவரம்)
பாபநாசம்- 73.35 அடி (16.70 அடி), சேர்வலாறு- 68.44 அடி ( 49.41 அடி), மணிமுத்தாறு- 49.23(41.74), கடனா- 60.30 (25) , ராமநதி- 64.25 (25), கருப்பாநதி- 57.98 ( 24.77), குண்டாறு- 36.10 (16.37 ), அடவிநயினார்- 100 (16), வடக்குபச்சையாறு- 3.25 (1.25), கொடுமுடியாறு- 43 (2).

திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஆகும். கடந்த 2016-ம் ஆண்டில் 396.88 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருந்தது. இது இயல்பைவிட 51.3 சதவீதம் குறைவு.

வறண்ட நிலையில் 2,404 குளங்கள்
தென்மேற்கு பருவ மழைக்காலமான ஜூன் மாதத்தில் இயல்பான மழையளவு 29.6 மி.மீ. ஆனால் 7.92 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருந்தது. ஜூலை மாதம் இயல்பான மழையளவு 26.4 மி.மீ.-ஐ விட மிகக் குறைவாக 1.75 மி.மீ. மழை மட்டுமே பெய்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழையளவு 23.30 மி.மீ.-க்கு பதில் 33.25 மி.மீ. மழை பெய்திருந்தது. செப்டம்பரில் இயல்பான மழையளவான 329 மி.மீ. என்ற அளவை தாண்டி 440 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றது. இம்மாதம் இயல்பான மழையளவு 495 மி.மீ.. ஆனால், இதை விட குறைவாக 459.12 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. அதில் 1,139 கால்வரத்து குளங்களும், 1,265 மானாவாரி குளங்கள் என மொத்தம் 2,404 குளங்கள் தண்ணீர் பெருகாமல் வறண்ட நிலையில் உள்ளன. ஒருசில வட்டாரங்களிலுள்ள கிணறுகளில் சராசரியாக 2 மணி முதல் 5 மணிநேரம் பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது.

குறையும் சாகுபடி பரப்பு
மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் 45 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 2,205 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 13,100 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 3,240 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

35,500 ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை 890 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

4,310 ஹெக்டேரில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை 330 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 2017-2018-ம் ஆண்டில் 1,32,310 ஹெக்டேரில் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 11,990 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 32,111 ஹெக்டேரில் பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து