மேயாத மான் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      சினிமா
mayor deer

Source: provided

3 வருடங்களாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணுக்கு திருமண நிச்சயம் ஆவதால் தற்கொலை செய்து கொள்ள போகும் இதயம் முரளியின் வாழ்க்கையில் நடப்பதே மேயாதமான்.

சில வருடங்களுக்கு முன்பு மது என்ற பெயரில் வெளியான குறும்படத்தை தற்போது முழு நீல திரைப்படமாக எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ரத்ன குமார். இதயம் முரளி(வைபவ்) 3 வருடங்களாக மதுமிதாவை(பிரியா பவானி சங்கர்) ஒரு தலையாக காதலித்து வருகிறார்.

மதுமிதாவிற்கு திருமணம் நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அதை தடுக்க அவரது நண்பரான வினோத்(விவேக் பிரசன்னா) ஒன்றை செய்கிறார். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு நடுவே வினோத்தை முரளியின் தங்கை(இந்துஜா) ஒரு தலையாக காதலிக்கிறார்.


இந்த ஒரு தலை காதல்கள் என்ன ஆனது என்பதே மேயாத மானின் கதை.நடிகர் வைபவ்வுக்கு இது பெயர் சொல்லும் படம். வடசென்னை சாலைகளில் பார்க்கும் கெத்து பையன் லுக்கை அசால்டாக திரையில் தருகிறார். படம் முழுக்க பல இடங்களில் இயல்பான நடிப்பால் கவரும் வைபவ் எமோஷனல் சீன்களில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தலாம்.

ஹீரோயின் பிரியா பவானி சங்கர் திரையில் ஜொலிக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்து இருக்கிறார். படத்தில் லீட் ஜோடியை விடவும் அசத்துகிறது வருகிறது விவேக் பிரச்சன்னா-இந்துஜா கதை. இருவரும் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ‘அட’ சொல்ல வைக்கிறார்கள்.

படம் முழுவதும் இந்த 4 பேரை சுற்றியே வருகிறது. ஒரு கட்டத்தில் அது அலுப்பை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து சீன்கள் தரும் உற்சாகம் அவற்றையெல்லாம் மறக்க வைக்கிறது. சின்ன வசனங்களில் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்தின் பெரிய பலம்.

படத்தில் பாதி காட்சிகளில் ஹீரோ குடித்துக்கொண்டே இருக்கிறார். மேலும் சில இடங்களில் திரைகதை தடுமாற படம் துண்டு துண்டாக இருப்பது போன்ற உணர்வு வந்ததை தவிர்க்க முடியவில்லை.முதல் படத்தில் தன்னிடம் இருக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் முடிந்த வரை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர்.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு அழகழகாக இருக்கிறது.ராயபுரம் லாலா லேண்ட் என்பது போலவே படத்தின் பாடல்களில் விளையாடி இருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் பிரதீப்-சந்தோஷ் நாராயணன். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகளுடன் ரசிக்க வைத்த விதத்தில் மேயாத மானுக்கு பெரிய பூக்கொத்து கொடுக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து