முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஒ.பி.எஸ். பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்று 23-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

எம்.ஜி.ஆரின் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது. அவருடைய வழியை பின்பற்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை, ஏளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து எம்.ஜி.ஆர் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

எம்.ஜி.ஆர் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன்படி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்தும், அரசின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பித்து வருகிறார்.

இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் பங்கேற்பு

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் மெயின் ரோடு அண்ணாமலையார் நகர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று 23-ம் தேதி  (திங்கள்கிழமை) மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். இவ்விழாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிப்பார். மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார். மேலும் பால்வளத்துறை அமைச்சர்  கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகிப்பார்.

நலத்திட்ட பணிகள்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து ரூ.48.81 கோடி மதிப்பிலான முடிவுற்ற 146 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.13.38 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 21,885 பயனாளிகளுக்கு ரூ.117.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி விழாப்பேருரையாற்றுவார்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி (புதுடெல்லி) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), அ.அன்வர்ராஜா (இராமநாதபுரம்), மு.வசந்தி (தென்காசி) திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுவார், விருதுநகர் மாவட்ட கலெக்டர் அ.சிவஞானம் நன்றியுரையாற்றுவார்.

கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து