விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      சினிமா
actor vishal(N)

சென்னை, விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் மத்தியகலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.  சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவரது தயாரிப்பு அலுவலகமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு நடத்தி வருகின்றனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் டி.பி.நாகேந்திரகுமார், ராஜசேகர், உள்ளிட்டோர் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. அதிகாரிகள் கேட்டதன் பேரில் விஷால் தரப்பில் சரிபார்க்க ஆவணங்கள் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்நிறுவனத்தின் மூலம் ‘துப்பறிவாளன்’ படம் வெளியானது. இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை. விஷால் தயாரிப்பு நிறுவனம் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தியுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக இணையத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக கூறிய எச். ராஜாவுக்கு, விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது செயலுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால் வலியுறுத்தினார். திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததாக கட்சி பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் கூறியது வேதனை அளிக்கிறது. மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி திருட்டு வீடியோவை ஆதரிக்கிறீர்கள் என்றும் திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டபூர்வமாக ஆகிவிட்டதாக என்றும் எச். ராஜாவுக்கு விஷால் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த சோதனை நடத்தப்படுவது அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து