கரூர் நகராட்சி மற்றும் தாந்தோணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      கரூர்
Karur 2017 10 26

கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் செங்குந்தபுரம் 2 மற்றும் 3வது குறுக்குத்தெரு, நகராட்சி அலுவலக வளாகம், காமராஜர் மார்கெட், இரட்டை வாய்க்கால், உழவர்சந்தை பின்புறம் உள்ள பிரம்மதீர்த்தம் சாலை, மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி, ஸ்டேட் பேங்க் காலணி, சக்தி நகர், பென்னிகுயிக் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வீடு வீடாக ஆய்வு செய்து சுற்றுபுறங்களை மக்களோடு நின்று நேற்று (26.10.2017) பணிகளை ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

இந்நிகழ்ச்சியின் போது கலெக்டர் தெரிவித்ததாவது: டெங்கு தடுப்பு பணிகளான சுற்றுபுறத்தை துhய்மையாக வைத்துக்கொள்ளல், கழிவு நீர் வடிகால்களை தூர்வாரி உடனுக்குடன் கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தண்ணீரில் குளோரினேட் செய்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கூடுதலாக பொதுமக்களும் தங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ளவதுடன் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசுக்கள் புகா வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும். வீட்டில் தேவையில்லாத பிளாஸ்டிக் டப்பாக்கள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பயன்பாடற்ற பொருட்களை அப்புறபடுத்தி தங்கள் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து தங்களை காத்து கொள்வதுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக அக்கறையோடு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் உரிய மருத்துவ பரிசோதனை பெற்றும் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டுமென மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார். செங்குந்தபுரம் 2வது குறுக்கு தெரு தனியாருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் நீர் தேக்க தொட்டியில் கொசுக்கள் உள்ளதை கண்டறியப்பட்டு அந்த கட்டட உரிமையாளருக்கு ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையின் பின்புறம் பிரம்மதீர்த்தம் சாலையிலுள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டத்தில் அருகிலுள்ள கழிவுகள் கண்டறியப்பட்டு அந்த கட்டட ஒப்பந்ததாரருக்கு ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை கவிதா, நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) இராஜ்மோகன், வட்டாட்சியர் அருள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து